கரூர் அருகே கோவில் இனாம் நிலத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சீல் வைக்கும் பணியினை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரை அடுத்து வெண்ணைமலை அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான 560 ஏக்கர் நிலங்கள் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளது. அப்பகுதிகளில் வருவாய் துறை மூலம் பட்டா வாங்கி ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகட்டி தங்கள் குடும்பத்துடன் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பெயரில் கோவில் இனாம் நிலங்களில் உள்ள இடங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்ன வடுகபட்டியில் கண்ணம்மாள் என்பவரின் வீட்டுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையில் அதிகாரிகள் வந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணம்மாள் குடும்பத்தினர் 4 பேர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுவினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் அங்கு திரண்டு அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பாமக மாவட்ட தலைவர் பிரேம்நாத் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 42 வீடுகள் மற்றும் 2 செல்போன் டவர் உள்ளிட்ட பகுதிகளில் சீல் வைக்கும் பணியில் இந்து சமய அறநிலைத்துறையினர் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு பிரிவினர் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 100க்கும் மேற்பெட்டோரை கைது செய்த காவல் துறையினர் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.
