கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை 10 தொகுகளில் ஜெயிக்க வைத்த மக்களுக்கு கூட மெட்ரோ ரயில் திட்டத்தை கொடுக்க மோடி அரசுக்கு மனமில்லை என செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் , கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று (செப்டம்பர் 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ” முதல்வரின் வேண்டுகோளின் அடிப்படையில் மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இந்தத் திட்ட அறிக்கை வழங்கப்பட்டு 15 மாதங்கள் ஆகிவிட்டது. உலக வங்கியும் வந்து பலமுறை ஆய்வு செய்திருக்கின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஐந்து மாதங்களில் விரிவான அறிக்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் அற்பமான காரணங்களை கூறி நிராகரித்து இருக்கின்றனர் என்றார்.
மேலும் விளக்கங்கள் வேண்டும் என கேட்டால் அதை தமிழக அரசு நிவர்த்தி செய்யும். ஒரு தலை பட்சமாக தமிழக மக்களை, கோவை மக்களை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்து இருக்கின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் 10 தொகுதிகளில் ஜெயிக்க வைத்தனர். அப்படிப்பட்ட மக்களுக்கு கூட மெட்ரோ திட்டத்தை கொடுக்க மனம் இல்லாத அரசு இந்த மோடி அரசு என விமர்சித்தார்.
மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். பணிகளை மாநில அரசு செய்தது என தெரிவித்த அவர், இப்பொழுது அனுமதி கொடுக்க கூட மனம் இல்லாத அரசாக பாஜக அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. விரிவான அறிக்கையில் சந்தேகம் இருந்தால் அதை கேட்க 15 மாதங்கள் அவகாசம் எடுக்கத் தேவையில்லை. பாஜக அரசு மூன்றாவது முறையாக அமைந்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்கள் என்ன? ஒரு திட்டத்தை கூட கொடுக்க மனம் இல்லாமல் இந்த அரசு இருக்கின்றது என குற்றம் சாட்டினார்

நமக்குத் தேவை மெட்ரோ ரயில் திட்டம், அதை கொண்டு வர வேண்டும், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசுதான் எடுக்க வேண்டும், அவர்கள் ஏன் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தமிழக முதல்வர் செயல்படுத்துவார். இது வந்தே தீரும். இந்தியாவில் எந்த மாநிலங்களில் மெட்ரோவிற்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய அவர், இங்கு நிராகரிக்கபட்டதன் நோக்கம் தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மை தான் காரணம் என தெரிவித்தார்.
கோவையில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. கோவையின் வளர்ச்சி என்பது திமுக ஆட்சியில் தான் நடந்திருக்கின்றது” என தெரிவித்தார்.
