நாடகத்துக்கு அடுத்து சினிமாதான் மக்களுக்கான பொழுதுபோக்கு என்று இருந்த காலத்தில் சென்னை கோவை போன்ற முக்கிய ஊர்களில் ரிலீஸ் ஆகும் புதிய படங்கள், இரண்டாம் நிலை நகரங்களுக்கு வர , குறைந்தது ஒரு வருடம் ஆகும் . கிராமத்து டூரிங் தியேட்டர்களுக்கு வர இன்னும் தாமதம் ஆகும்.
அந்தப் படங்கள் கிராமங்களில் ஓடும் போது புதிய படங்கள் பெரிய ஊர்களில் ரிலீஸ் ஆகும் .
சில சமயம் போதுமான படங்கள் கிடைக்காத சூழலில் இரண்டாம் நிலை நகர, கிராமப்புற சினிமா கொட்டகைகளில் அதற்கு முன்பு வந்த பழைய படங்களைப் போடுவார்கள் . பெரிய ஊர்களிலும் கூட சில பழைய தியேட்டர்களில் அப்படி பழைய படங்களை போடுவார்கள்.
பொதுவாக எம் ஜி ஆர் சிவாஜி, கமல் ரஜினி , அப்புறம் ராஜேந்தர், பாக்கியராஜ் படங்கள், இப்படி மீண்டும் மீண்டும் ஓடும் . அதனால் புதுப் படங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
ஒரு நிலையில் எம் ஜி ஆரின் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை உள்ளிட்ட படங்கள், புதுப் படங்கள் கிடைக்காதபோது மாநகரங்களில் உள்ள பெரிய தியேட்டர்களிலும் வெளியிடப்படும் . அது சில சமயம் புதுப் படங்களை விட சிறப்பாக ஓடும்.
உதாரணமாக சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் , நாடோடி மன்னன் போன்ற படங்களைப் போட்டால் முப்பது நாள் நாற்பது நாள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடும்.
இந்த நிலையில் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை தொழில் நுட்ப மேம்பாடு செய்துதமிழகம் முழுக்க ரிலீஸ் செய்தார்கள் . எல்லா இடங்களிலும் பெரு வெற்றி.
அப்புறம் எம் ஜி ஆர் நடித்த அடிமைப்பெண் படத்தை சினிமாஸ்கோப் ஆக்கி வெளியிட்டார்கள் . அப்புறம் வசந்தமாளிகை படைத்தை ரீமிக்ஸ் செய்கிறோம் என்று பாட்டுகளை எல்லாம் டிஜிட்டல் செய்கிறோம் என்ற பெயரில் கெடுத்து ரிலீஸ் செய்தார்கள்.
இப்போ என்ன செய்கிறார்கள்? பத்து வருடம் இருபது வருடம் முன்பு வந்த படங்களைக் கூட பெரிய நடிகர் நடித்த படம் என்றால் வாரம் ஒரு படமாக தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.
அதுவும் தொழில் நுட்ப மேம்பாடு செய்து , அதையும் சரியாக படத்தின் ஒரிஜினாலிட்டி கெடாமல் செய்து, தேவையற்றதை குறைத்து , தரக் கூட்டல் செய்து வெளியிட்டால் கூடப் பரவாயில்லை. (அப்படி வந்த ஆட்டோகிராஃப் படத்துக்கே ஒன்றும் ஓகோ என்று வரவேற்பு கிடைக்கவில்லை)
ஆனால் , அன்றைக்கு படம் எப்படி இருந்ததோ அதை அப்படியே, சும்மா டப்பாவை மட்டும் கழுவி உள்ளே ஊசிப் போன உணவை வைப்பது போல, அப்படியே ரிலீஸ் செய்கிறார்கள்.அந்தப் படங்கள் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களாக இருப்பதால் அதற்கு ரசிகர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.
விளைவாக புதிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை.
வெளிவரும் புதிய தமிழ்ப் படங்களுக்கு ஓடிடிகள் , டி வி சேனல்கள், அதில் வரும் படங்கள், சீரியல்கள், கேம் ஷோக்கள் ரியாலிட்டி ஷோக்கள், பல வித விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்புகள் என்று முன்பே ஏகப்பட்ட எதிரிகள் . இதில் பழைய படங்களும் சேர்ந்து கொண்டு கழுத்தை அறுத்தால் அப்புறம் புதுப் படங்கள், அவற்றை எடுக்கும் தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் கதி என்னவாகும் ?
பழைய படங்களை பார்க்க டிவி, ஓடிடிகள், யூடியூப்கள் இருக்கிறதே . அதில் பார்த்துக் கொள்வதுதானே? இவ்வளவு நாளா அப்படித்தானே பார்த்தோம்?
இப்ப மட்டும் என்ன?
அப்படியே விட்டால் கூட இந்த ரி- ரிலீஸ் மாயை போகப் போக தெளிந்து விடும் என்பது உண்மைதான். ஆனால் அதுவரை புதுப் படங்களின் கதி.?
ஒரு பழைய படம் மீண்டும் தரக்கூட்டல் செய்யப்பட்டு மீண்டும் பெரிய தியேட்டர்கள் உட்பட எல்லா ஊர்களிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்றால் , அந்தப் படம் முதன் முதலில் வெளி வந்த நாளில் இருந்து நாற்பது வருடங்கள் ஆகி இருக்க வேண்டும் என்ற விதி வர வேண்டும் .
அப்போதுதான் நிகழ்காலத் தமிழ் சினிமா பிழைக்கும் .
பார்ப்போம்… நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் நடக்காத தயாரிப்பாளர் சங்கம்.. யார் இதைச் செய்யப் போகிறார்கள் என்று.
— ராஜ திருமகன்
