விஜயகாந்த்தால் சாதிக்க முடியாததை விஜய் சாதிப்பாரா என்ற கேள்விக்கு, பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2026 தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்தநிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு, 2026 தேர்தல், கூட்டணி, விஜய்யின் அரசியல் பயணம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார்.
கேள்வி பதில்
எந்த கூட்டணியை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?
கூட்டணி பேச்சுடன் எந்த கட்சியும் எங்களை அணுகவில்லை. ஆனால், எங்களுடன் நட்புறவை பேணி வருகின்றனர். டிசம்பர் 28 அன்று கேப்டனின் குரு பூஜைக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்து ஜனவரி 9 அன்று கடலூர் மாநாட்டில் அறிவிப்போம். விஜய் போன்றவர்கள் 2026 தேர்தல் களத்துக்கு வருவதால் இந்த தேர்தல் வித்தியாசமாக இருக்கும்.
கூட்டணி ஆட்சி குறித்து தேமுதிகவின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாடு இதுவரை கண்டிராத கூட்டணி அரசு என்ற கருத்தை தேமுதிக ஆதரிக்கிறது. இது அதிகாரக் குவிப்பைத் தடுக்கும் மற்றும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும்.
நீங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது நடந்தது என்ன?

விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது முதல்வர் அவரை பலமுறை வந்து சந்தித்தார். விஜயகாந்த் மற்றும் கலைஞர் குடும்பத்துடனான சந்திப்பு அவரது சினிமா நாட்களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். கலைஞர் இறந்தபோது சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்த விஜயகாந்த் எவ்வளவு வருத்தப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது நான் அவரை சென்று சந்தித்தேன். அவரது உடல்நிலை பற்றி மட்டுமே விசாரித்தேன்.
தவெக கூட்டங்களின் போது, விஜயகாந்த்தை ‘அண்ணன்’ என விஜய் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
விஜயகாந்த்தை யாருடனும் ஒப்பிட வேண்டாம். விஜயகாந்த் 2006 சட்டமன்றத் தேர்தலில் தனியாக களமிறங்கி 8.3 சதவிகித வாக்குகளை பெற்றார். 2009 பொதுத் தேர்தலிலும் தனியாக போட்டியிட்டு 10 சதவிகித வாக்குகளை பெற்றார். இப்படி வரலாறு படைத்தவர் விஜயகாந்த். எத்தனையோ சவால்கள், சட்டப்போராட்டங்கள், துரோகங்கள், தோல்விகள், சதித்திட்டங்கள் நடந்தன.
கேப்டனுக்கும் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சிக்கும் இடையிலான பிணைப்பு 1981ல் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்திலிருந்தே தொடர்கிறது. எஸ்.ஏ.சி விஜயகாந்த்தின் 17 படங்களை இயக்கியுள்ளார். எஸ்.ஏ.சி இயக்கிய விஜய்யின் செந்தூரபாண்டி படத்துக்கு ஆதரவு தெரிவித்தவர் விஜயகாந்த்.
எனவே விஜய், விஜயகாந்த்தை அண்ணன் என்று அழைக்கிறார் என்றால் அவர் எங்களுக்கு தம்பிதான். எங்கள் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை பொறுத்தவரை விஜயகாந்த்தான் தலைவராகவே இருக்கிறார். புதிய பேச்சுகளை கேட்டு எங்கள் உறுப்பினர்கள் எளிதில் மயங்கிவிட மாட்டார்கள்.

விஜய்க்கு கூடும் கூட்டத்தை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
கேப்படன் அதிகளவினான கூட்டத்தை கண்டிருக்கிறார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த எங்கள் திருமணம் மக்களால் நிரம்பியிருந்தது. எங்கள் முதல் கட்சி மாநாட்டில் பார்த்தது போல, நாங்கள் பெரிய கூட்டத்திற்குப் பழகிவிட்டோம். விஜய் ஒரு பெரிய நட்சத்திரம், மக்கள் அவரைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர் – அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இது வாக்குகளாக மாறுமா? என்று எனக்குத் தெரியவில்லை.
விஜயகாந்த்தால் சாதிக்க முடியாததை விஜய்யால் சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
விஜய் தனது பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டத்தை தான்முடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள், இன்னும் நீண்ட பயணம் உள்ளது. அரசியல் என்பது சினிமாவைப் போல எளிதானது அல்ல. பல சவால்கள் உள்ளன.
ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொரோனா தொற்று உட்பட ஏராளமான சவால்களை அவர் எதிர்கொகொண்டார். அவற்றை திறம்பட நிர்வகித்தார்.
ஸ்டாலின் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அர்ப்பணிப்புடன், கடமை, கண்ணியம், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தி செயல்படுகிறார். உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவர் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகிறார். தற்போதைய ஆட்சி பலம் மற்றும் பலவீனங்களைக் கொண்டுள்ளது. மருத்துவக் கழிவுகளைக் கொட்டுதல் மற்றும் சட்டவிரோத வளச் சுரங்கம் போன்ற பிரச்சினைகள் நீடிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முன்மாதிரியாக ஏன் கருதுகிறீர்கள்?
பெண்கள் தலைமைப் பதவிகளை வகிப்பது எளிதல்ல, குறிப்பாக அரசியலில். அவதூறுகள் மற்றும் விமர்சனங்களை வெல்ல மிகுந்த மன உறுதி தேவை. ஜெயலலிதா ஒரு வலிமையான தலைவராகவும் முதலமைச்சராகவும் தனித்து நின்றார். அவரது சினிமா வாழ்க்கையிலும், எதிர்க்கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் பல தடைகளை எதிர்கொண்ட போதிலும் அவரது சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே, நான் அவரை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறேன்.
இன்றைய அதிமுக மற்றும் வரவிருக்கும் தேர்தலில் அதன் வாய்ப்புகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுக ஒன்றாக இருந்தது. தற்போது எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என நான்காக பிரிந்துள்ளது. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”. இது உட்கட்சி விவகாரம். அவர்கள் ஒன்றிணைந்தால், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தேர்தல் முடிவுகளை கணிப்பது சவாலானது.
அதிமுக உங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவதாக அறிவித்துவிட்டு, பின்னர் வழங்காதது குறித்து?
எங்களுக்கு ராஜய்சபா சீட் மறுக்கப்பட்டபோது தொண்டர்கள் வருத்தமடைந்தனர். இப்போது, 2026 இல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.