அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது பொய்யான செய்தி என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 25ஆம் ஆண்டு கொடி நாளையொட்டி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றினார். தேமுதிக தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுக, திமுக என இரண்டு பக்கமும் தேமுதிக பேசுகிறதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது பொய்யான, தவறான செய்தி. இதை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எ.வ. வேலு ஆகியோரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. உரிய நேரத்தில் அறிவிக்கும். எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் எந்தக் கூட்டணியை விரும்புகிறார்களோ, அந்தக் கூட்டணியைத் தான் இந்த முறை தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் அமைக்கும்.
எப்போது கூட்டணி அமைப்பீர்கள் என்ற கேள்வியை என்னிடம் கேட்க வேண்டியது எங்கள் மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள்தான். ஆனால் அவர்கள் கூலாகவும், ஹாப்பியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.
இது எங்கள் கட்சி என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை உரிய நேரத்தில் எங்கள் கழகத்தைச் சேர்ந்தவர்களிடம் கலந்தாலோசித்து உறுதியாக அறிவிப்பேன். அதனால் No Tension… Be Cool,” என்று தெரிவித்தார்.
