கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற கருப்பொருளில் 2025- 26ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண், தமிழ்புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களின் தொடக்கவிழா நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் நான் முதல்வன் திட்டத்தில் பயன் பெற்ற மாணவி பிரேமா தனது முதல் சம்பளத்தை விழா மேடையில் தனது தந்தையிடம் வழங்கி மகிழ்ந்த நிகழ்வு அரங்கில் இருந்தவர்களை நெகிழச்செய்தது.
விழாவில் பேசிய மாணவி அப்பா ஒழுகும் வீட்டில் இருப்பார் என்று கண்கலங்கிய படி தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!
எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.