தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வின்பாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கான முன்பதிவு இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. pre Bookings started for vinfast electric cars vf6
தமிழக அரசின் சார்பில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்தாண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில், ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், தூத்துக்குடியில் மட்டும் 2 நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை தமிழக அரசுடன் மேற்கொண்டன.

அதில் ஒன்று தான் வியட்நாமைச் சேர்ந்த உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட். இந்த நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து,தூத்துக்குடி சிலாநத்தம் பகுதியில் 408 ஏக்கர் நிலம் அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2024 பிப்ரவரி மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் அங்கு உற்பத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ள வின்பாஸ்ட் விஎப் 6 மற்றும் விஎப் 7 ஆகிய இரு வகையான எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

இதற்காக https://vinfastauto.in/en என்ற இணையதளத்தில் காரைத் தேர்வு செய்து, மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட தகவல்களை அளித்து, இறுதியில் ரூ.21 ஆயிரம் முன்பணம் செலுத்தி முன்னதாகவே புக்கிங் செய்து கொள்ளலாம்.
மொத்தம் 6 நிறங்களில் இரு கார்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை காரின் விற்பனை விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.