சக இந்தியர்களைப் போல் கூட்டணி அரசு அமைவதில் தமிழக மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது, “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், காங்கிரஸுக்கும் தெரியும். திமுகவும் காங்கிரஸும் இணைந்துதான் தேர்தலை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்ற பேச்சு தற்போது எழவில்லை. திமுக கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்று சிலர் சதி செய்கிறார்கள். இந்த சதிகளைப் பற்றி நாங்களும் கவலைப்படவில்லை, அவர்களும் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தவர்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர் எம்பி, “கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தமிழ்நாடு மட்டும் ஏன் தனித்துவம் என்ற போலி பிம்பத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களைப் போல் கூட்டணி அரசு அமைவதில் தமிழக மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தனித்துவமான விஷயம் அல்ல. ஜார்கண்ட், கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
