தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் மாநிலத்துக்கு வருகை தருவதால் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் ஆகஸ்ட் 27-ந் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக பீகார் தேர்தல் களத்தை எதிர்கொண்டிருக்கும் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: பீகார் மாநிலத்துக்கு தற்போதைய தேவை வெளிமாநில தலைவர்கள் பேச்சுகள் அல்ல. பீகாரில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேலைவாய்ப்பினமை மற்றும் பிற மாநிலங்களுக்கான இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
கர்நாடகா, தமிழ்நாடு முதல்வர்கள் பீகாருக்கு பயணம் மேற்கொள்வதால் ஒரு மாற்றமும் நடந்துவிடாது. பீகார் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி பேச வேண்டும். பீகாரை விட்டு பிற மாநிலங்களுக்கு இளைஞர்கள் இடம் பெயருவதைத் தடுக்க வேண்டும். இதுதான் பீகாரின் மிகப் பெரும் சவால்கள்.
ஆனால் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைத்து வருகின்றன. பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சிக்கிறார்; ராகுல் காந்தியை மோடி விமர்சிக்கிறார்.. இதைத் தவிர வேறு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் பாஜக, காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை. பீகாரின் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும்; வேலைவாய்ப்புக்கான சூழ்நிலைகளை அதிகரிக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் பேச மறுக்கின்றனர். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பிரசாந்த் கிஷோர், தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றினார். பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் ஏற்கனவே தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.