தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, “அதிகாரத்தில் பங்கு” தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர், கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று ஜனவரி 11-ந் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதை எப்போதுமே நாங்கள் ஏற்றுக் கொண்டது இல்லை. திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே கூட்டணி ஆட்சி கிடையாது.
திமுக எப்போதும் தனிப்பட்ட முறையில்தான் ஆட்சி அமைக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சி இருக்காது..இதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
