அதிமுக பாஜக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் எதிர்பார்த்தது வேறு, நடந்தது வேறு” என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் விவரங்களை இன்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அந்த வகையில், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தொகுதி அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன் மூர்த்தி, “இப்போதுதான் தொகுதியை அறிவித்துள்ளனர். நாங்கள் எதிர்பார்த்தது வேறு, இங்கு நடந்தது வேறு. நாளை எங்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும். அது குறித்து நாளை விரிவாகப் பேசுகிறேன்,” என்று தெரிவித்தார்.
