தமிழக பெண்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக பெண் தொண்டர்கள் குறித்த தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளரும், அரசியல் விமர்சகராகவும் உள்ள பொன்ராஜ், சமீபத்தில் தமிழக பெண்கள் மற்றும் தவெக பெண் தொண்டர்களை விமர்சித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது இந்தப் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், பொன்ராஜ் பேச்சு தொடர்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தவெக தரப்பில் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார். பொன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது பேச்சுக்கு பொன்ராஜ் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன்.
எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். ” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் தனது எக்ஸ் பதிவில் நடிகர் விஜய்யின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்துள்ளார். அதில், “நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா? உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து : அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல்”என விஜய்யின் கண்டன பதிவை சுட்டிக்காட்டி உள்ளார்.
