திரு.வி.க நகர் தொகுதி : மேயர் பிரியா vs பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்?

Published On:

| By Kavi

2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக சார்பில் விருப்ப மனு பெற்று முதல்வர் ஸ்டாலின் நேர்காணலும் நடத்தி முடித்து விட்டார். 

ADVERTISEMENT

தொடர்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

அதேபோன்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கும் நிலையில் அடுத்த கட்ட வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சீட் கேட்டுள்ளார். 

தான் புதிதாக தொடங்கியுள்ள தமிழ் மாநில பகுஜன் சமாஜ் சார்பில் தேர்தலில் நிற்க ஒரு சீட் வேண்டும் என பொற்கொடி கேட்க, இரட்டை இலை சின்னத்தில் களம் காண எடப்பாடி பழனிசாமியும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளார். 

ADVERTISEMENT

அந்த ஒரு தொகுதி, திருவிக நகர் எனவும் அதிமுக அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் போது அதில் பொற்கொடி பெயரும் இடம்பெறும் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 

திருவிக நகர் தொகுதி என்பது பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்து சில பகுதிகளை பிரித்து 2011 இல் உருவாக்கப்பட்ட தனி தொகுதி ஆகும். 

இந்தப் பகுதிகளில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். எழும்பூர் தொகுதியின் 99 ஆவது வார்டில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற   சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் ஆம்ஸ்டராங் வெற்றி பெற்றவர். 

அவரது மறைவிற்குப் பிறகு பொற்கொடி நீதி கேட்டு போராடி வருகிறார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு எனது கணவரின் கொலையே சாட்சி என்று கூறிவரும் பொற்கொடி தேர்தலில் களம் இறங்கியிருப்பது அந்த பகுதி மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி இருக்கிறது. 

ஆனால் திருவிக நகர் திமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதியில் ஆதிதிராவிடர், அருந்ததியினர் உட்பட அனைத்து தரப்பினரும் வசித்து வருகின்றனர். இந்த தொகுதி உருவாக்கப்பட்டு முதல் முறையாக 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் நீலகண்டன் 72,887 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் நடேசனை தோற்கடித்தார். 

அதன் பிறகு 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தாயகம் கவி,  61,744 வாக்குகளைப் பெற்று நீலகண்டனை தோற்கடித்தார். தொடர்ச்சியாக 2021 தேர்தலில் 81,727 வாக்குகள் பெற்று மீண்டும் எம்எல்ஏ ஆனார் தாயகம் கவி. 

இந்த சூழலில் திருவிக நகரில் பொற்கொடி களமிறங்கும் நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட வலுவான போட்டியாளரை திமுக களம் இறக்க திட்டமிட்டுள்ளது 

அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சி மேயராக இருக்கும் பிரியா நிறுத்தப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் 74 வது வார்டில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 6,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் பிரியா ராஜன்.

சென்னையின் மூன்றாவது பெண் மேயராகவும், வடசென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையையும் பெற்றார். 

இவரது தந்தை ஆர்.ராஜன். அந்தப் பகுதி திமுக இணைச்செயலாளராக இருக்கிறார். இவர்களது குடும்பமே 40 ஆண்டுகளாக திமுகவின் விசுவாசியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில்  மேயர் பதவியை தொடர்ந்து எம்எல்ஏவாகும் எண்ணத்தில் பிரியாவும் வேலை செய்து வருகிறார் என்கிறார்கள் திரு வி க நகர் திமுகவினர். 

ஏற்கனவே சென்னை மாநகராட்சி மேயராக இருந்த ஸ்டாலின் இப்பொழுது முதல்வராக உள்ளார். அதேபோன்று மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இப்போது அமைச்சராக உள்ளார். அந்த வரிசையில் தற்போது மேயர் பிரியா ராஜனும் இணைய இருக்கிறார்.

எனவே சென்னை மேயர் பிரியா மற்றும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆகிய இருவருமே தங்கள் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அரசியல் பின்புலத்தைக் கொண்டுள்ளதால், இந்த தொகுதியில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share