திமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு. பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில்
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளராகவும்,
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆக பொறுப்பு வகித்து வந்த பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ஈஸ்வர சுவாமி திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியும் திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பெண்களை குறிப்பிட்டு சைவம், வைணவம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசியதால் அவரது அமைச்சர் பதவியும் திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.
இந்த சூழலில் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் கனிமொழி, ஐ பெரியசாமி, திருச்சி சிவா, ஆ ராசா, அந்தியூர் செல்வராஜ் என ஐந்து பேர் துணை பொதுச்செயலாளர்களாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் திமுகவில் துணைப் பொதுச் செயலாளர்கள் பொறுப்பு 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகளை செம்மையாக செய்திடவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு வேலூர் வடக்கு வேலூர் தெற்கு ஆகிய இரு மாவட்ட கழகங்கள் பிரிக்கப்படுகிறது.
வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வேலூர் தெற்கு மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நந்தகுமாரும், காட்பாடி, கீழ்வை தியாணான்குப்பம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய வேலூர் வடக்கு மாவட்டத்துக்கு கதிர் ஆனந்த் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
