பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கியிருக்கும் நிலையில் முதல் நாளான இன்று, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. 13ஆம் தேதி போகி, 14ஆம் தேதி சூரியன் பொங்கல், 15ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொழில் நகரங்களில் வேலை செய்வோர், பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல தயாராவார்கள். எனவே பயணிகள் ரயிலில் செல்வதற்கு 60 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கிவிடும்.
அதன்படி, ஜனவரி 9 ஆம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நெல்லை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்களில் டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது. தற்போது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஜனவரி 10ஆம் தேதி பயணிப்பவர்கள் நாளையும், ஜனவரி 11ஆம் தேதி பயணிப்பவர்கள் நவம்பர் 12ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதி பயணிப்பவர்கள் நவம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 14 ஆம் தேதி பயணிப்பவர்கள் நவம்பர் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 18ஆம் தேதி கிளம்புபவர்களுக்கான முன்பதிவு நவம்பர் 19ஆம் தேதி காலை தொடங்கும்.
ரயில் டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் அல்லது IRCTC மொபைல் ஆப் மூலமாக புக் செய்து கொள்ளலாம்.
நாளை, காலை 8 மணிக்கே முன்பதிவு தொடங்கிவிடும் என்பதால் ரெடியாக இருந்து உங்களுக்கான டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள்.
