அரசியல் கட்சிகளை பணியிடமாக எப்படி கருத முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கறிஞர் யோகமாயா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தை (போஷ்-2013) அரசியல் கட்சிகளில் இருக்கும் பெண்களுக்கும் பொருந்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஏற்கனவே கேரள உயர் நீதிமன்றம், அரசியல் கட்சியினரும் அதன் உறுப்பினர்களும் முதலாளிகள் – ஊழியர்கள் இல்லை என்று கூறி அரசியல் கட்சிகளில் உள் விசாரணை குழு கட்டாயமில்லை என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துதான் வழக்கறிஞர் யோகமாயா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
இந்த மனு நேற்று (செப்டம்பர் 15) தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், “பல பெண்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், சிபிஎம் மட்டுமே வெளிப்புற உறுப்பினர்களைக் கொண்ட உள் புகார் குழுவை (ஐசிசி) அமைத்துள்ளது. ஆனால், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்குள் உள்ள கட்டமைப்புகள் போதுமானதாகவோ அல்லது வெளிப்படைத்தன்மையாகவோ இல்லை.
அதனால் அரசியலில் இருக்கும் பெண்கள் துன்புறுத்தல் வழக்குகளில் உதவியின்றி தவிக்கிறார்கள். எனவே போஷ் சட்டம் அரசியல் கட்சியினருக்கும் பொருந்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளை பணியிடமாக எப்படிச் சமன்படுத்துகிறீர்கள்?. ஒருவர் அரசியல் கட்சியில் வேலைக்காக சேரவில்லை. அது வேலைவாய்ப்பு அல்ல… ஊதியம் அல்லாமல் சொந்த விருப்பத்தின் பேரில் கட்சியில் சேர்கின்றனர்.
எனவே, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தில் அரசியல் கட்சிகளை எவ்வாறு சேர்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம், 2013 இன் கீழ் கொண்டுவரக் கோரிய மனுவை விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்தனர்.