சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இன்று (நவம்பர் 7) நகைக்காக இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிய விவகாரத்தில் அய்யனார் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள இடங்கணசாலை, தூதனூர் பகுதியில் கடந்த நான்காம் தேதி கல்குவாரியில் இரண்டு மூதாட்டிகளின் சடலங்கள் இருப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மூதாட்டிகளின் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான பாவாயி மற்றும் பெரியம்மாள் எனத் தெரியவந்தது.
இதையடுத்து மூதாட்டிகளின் சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டபோது மூதாட்டிகள் இருவரும் அணிந்திருந்த தங்க நகைகள் காணவில்லை எனத் தெரியவந்ததை அடுத்து, மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகர் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இது குறித்த விசாரணையில் கருப்பூர், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (53) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் குற்றவாளி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமைக் காவலர்கள் அழகுமுத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளியை நெருங்கினர்.
அப்போது குற்றவாளி அய்யனார் உதவி ஆய்வாளர் கண்ணனின் வலது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயற்சி செய்ததாகவும், இதனால் போலீசார் சுட்டதில் குற்றவாளி அய்யனாரின் வலது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளி அய்யனாரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தில் உதவி ஆய்வாளர் கண்ணனிடம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விமலா மற்றும் சங்ககிரி உதவிக் கண்காணிப்பாளர் தனசேகர், ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
