கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை போன்ற பகுதிகளில் மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் நடத்திய ஐந்து மணி நேர சோதனையில் சில இடங்களில் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சிக்கியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கோவை மாவட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல், கலைக் கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இவர்கள் அந்த கல்லூரிகள் சார்பில் நடத்தப்படும் விடுதிகளில் இடம் கிடைக்காததால் வெளியில் வீடுகள், தனியார் நடத்தும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி படித்து வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் பயன்பாட்டை தடுக்க, போலீசார் அவர்கள் தங்கி உள்ள அறைகளில் அவ்வப் போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும், அதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு மாணவரை தாக்குவதற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென் மாவட்டங்களில் இருந்து ஒரு கும்பல் புகுந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மீண்டும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். “Operation – CLEAN COVAI” என்ற ஆப்ரேஷன் அதிரடியாக மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று அதிகாலை 5 மணி முதல் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள இடங்களில் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இதற்கு மாவட்டம் முழுவதும் 91 குழுக்கள் அமைக்கப்பட்டு 412 போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை நடந்த சோதனையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரடியாக செட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் மாணவர்கள் அறையில் சோதனை நடத்தினார். அப்போது அவர்கள் தங்கி இருந்த அறையில் ஒவ்வொரு பகுதியாக நுழைந்து போலீசார் சோதனை செய்தனர்.
காலை 5 மணிக்கு தொடங்கிய போலீசாரின் அதிரடி சோதனை 10 மணியை தாண்டி நடந்தது. இந்த ஐந்து மணி நேர சோதனையில் சில இடங்களில் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் போலீஸ் சோதனையில் சிக்கி உள்ளன.
இது தொடர்பாக காவல்துறையினர் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.