சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து கோவை வரும் விமானத்தில் உயர் ரக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று காலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு SCOOT விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது 6.7 கிலோ ஹைட்ரோபோனிக்ஸ் என்ற உயர் ரக கஞ்சாவினை இருவர் தங்கள் உடைமைகளில் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 7 கோடி ஆகும்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த பஹத் மோன் முஜீப் , சுஹைல் வாழமத் உபைதுல்லா என்பது தெரியவந்து.
இருவரும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய கஞ்சாவை கடத்தி வந்த நிலையில் அவர்கள் மீது சுங்கச் சட்டம் மற்றும் போதை பொருள் தடுப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் சுங்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
