கோவையில் நடந்த சாலை விபத்தில் ஈச்சர் வாகனம் மோதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரான பானுமதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் பானுமதி(52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகி விட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் கோவை திரும்பினார்.
காலை பேருந்து நிலையத்தில் அவரது மகன் பானுமதியை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார். அப்போது சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் மகனின் பின்புறம் அமர்ந்து பானுமதி சென்று கொண்டிருந்த பொழுது, அவருக்கு பின்புறம் அரிசி மூட்டை ஏற்றியபடி ஈச்சர் வேன் வந்தது. இந்நிலையில் இருசக்கர வாகனம் ஒன்று இடையில் வந்த நிலையில், அவரது மகன் பிரேக் பிடிக்க, பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த பானுமதி தவறி கீழே விழுந்தார்.
இதில் எதிர்பாராத விதமாக ஈச்சர் வேன் ஆய்வாளர் பானுமதியின் மீது ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மீட்டு சிங்காநல்லூர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து ஆய்வாளர் பானுமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம்
காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே விபத்து ஏற்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.