நெல்லை ஐடி ஊழியர் கவின்குமார் சாதிஆணவக் கொலை விவகாரத்தில், கைதான சுர்ஜித்தின் போலீஸ் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் இன்று (ஜூலை 29) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியரான கவின்குமாரும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷினியும் காதலித்து வந்தனர். எனினும் பெண் வீட்டார் சாதியை காரணம் காட்டி அவர்களின் காதலை ஏற்க மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி விபத்தில் சிக்கிய தனது தாத்தாவை சிகிச்சைக்காக, சுபாஷினி சித்த மருத்துவராக பணிபுரியும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது கவின்குமாரை சுபாஷினியின் தம்பி சுர்ஜித், தனியாக பேச வேண்டும் என தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்துவிட்டு சரணடைந்த சுர்ஜித் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது போலீஸ் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கவின்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்த கொலைக்கு நீதிக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொலையாளி சுர்ஜித்துக்கு உச்சபட்ட தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும், சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வரும் போலீஸ் தம்பதி சரவணன் – கிருஷ்ணகுமாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “இந்த கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுர்ஜித் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையில் பணியாற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்களை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும் அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் ஆணவக்கொலையில் கைதான சுர்ஜித்தின் தந்தை ராஜபாளையம் பட்டாலியன் எஸ்.ஐ., சரவணன், தாய் மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி இருவரையும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.