தவெக தலைவர் விஜய் டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்த விஜய்யின் அனைத்து பிரச்சாரக் கூட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ஒரு மாதத்திற்கு பின் மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்று தனியார் ஓட்டலில் வைத்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய விஜய் திமுக அரசை கடுமையாக சாடினார். மேலும் இனி எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் மீண்டும் விஜய் சேலத்தில் பிரச்சார கூட்டத்தை தொடங்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று விஜய் வரும் டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் பரப்புரையில் ஈடுபட அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
சேலத்தில் உள்ள போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல் நாயக்கன் பட்டி ஆகிய இடங்களில் ஒன்றில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கார்த்திகை தீப பணிகள் உள்ளதால் டிசம்பர் 4ம் தேதி அனுமதி தர இயலாது என்றும், வேறு ஏதேனும் ஒரு தேதியில் அனுமதி தர தயார் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடாமல் உள்ளதாகவும், எண்ணிக்கையை குறிப்பிட்டால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
