கோவையில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதி அருகே கடந்த ஞாயிறன்று இரவு கல்லூரி மாணவி தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர். சிறிது தொலைவில் வைத்து மாணவியை கொடூரமான வகையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நிர்வாண நிலையில் அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்த நிலையில் மாணவியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை தேடிய போலீசார் நேற்று அதிகாலையில் நிர்வாணமாக இருந்த நிலையில் அவரை மீட்டனர். இதைத்தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பெண்கள் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மகளிரணி தலைவரும், கோவை எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தலைமையில் நேற்று மாலை பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுட்டு பிடித்த காவல்துறை
இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, நள்ளிரவில் கோவை வெள்ளகிணறு பட்டத்தரசியம்மன் கோயில் பகுதியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரும் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
