பாமகவின் சட்டமன்ற கொறடா பதவியில் இருந்து ராமதாஸ் ஆதரவாளரான அருள் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவுவிடம் பாமக தலைவர் அன்புமணியின் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. PMK Anbumani Arul Ramadoss
பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமகவின் தலைவர் அன்புமணி ஆகியோர் இடையேயான மோதல் தொடருகிறது. டாக்டர் ராமதாஸின் ஆதரவாளரான அருள் எம்.எல்.ஏ.வை பாமகவில் இருந்து அன்புமணி நீக்கினார். ஆனால் தம்மை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என கூறினார் அருள்.

இந்த நிலையில் இன்று ஜூலை 4-ந் தேதி, சபாநாயகர் அப்பாவுவிடம் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர். அதில், பாமகவின் தற்போதைய சட்டமன்ற கொறடா அருள் எம்.எல்.ஏ.வை கட்சித் தலைவர் அன்புமணி நீக்கி உள்ளார்; அவருக்கு பதிலாக பாமக சட்டமன்ற கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்; ஆகையால் பாமக சட்டமன்ற கொறடாவாக மயிலம் சிவகுமார் எம்.எல்.ஏ.வை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் பாமகவுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜிகே மணி, கொறடா அருள் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் அணியில் உள்ளனர். வெங்கடேசன், சிவகுமார், சதாசிவம் ஆகிய மூவரும் அன்புமணி அணியில் இருக்கின்றனர்.