நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மக்களால் இன்று (அக்டோபர் 20) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துக்கள். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் ஒளிரட்டும். நம்மைச் சுற்றி நேர்மறை உணர்வு நிலவட்டும்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
சக குடிமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்கள். 🪔 இந்தியா மகிழ்ச்சியின் விளக்குகளால் ஒளிரட்டும், மேலும் ஒவ்வொரு வீடும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளியால் நிரப்பப்படட்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை
தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து அனைவரும் இணைந்து தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.
மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் ஆட்சி நடத்தி வருகிற பா.ஜ.க.விற்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருகிறது. தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.
பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம் போல் மற்ற மதத்தவர்களோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பாரத மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம், வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பரவ இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்!
இந்த தீபாவளித் திருநாளில், நாம் அனைவரும் ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை இவ்வுலகில் தனித்துவமாக மிளிரச் செய்யட்டும்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தீபத்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதர்மத்தை அழித்து, தர்மம் வென்றதை உலகிற்கு உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் நாம் ஏற்றும் ஒளி, அறியாமை எனும் இருளை அகற்றி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பாய்ச்சக்கூடியதாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தீமைகள் அழிந்து நன்மைகளை பெருக்கக்கூடிய இந்த திருநாள், மக்கள் அனைவருக்கும் நல்லதொரு எதிர்காலத்தை கொடுக்கும் நாளாக அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
மாநிலங்களவை எம்.பி கமல்ஹாசன்
ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்;
வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்;
தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக
தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக.
