தமிழகத்தில் மழை நிலவரம் குறித்தும், பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கோவை, நீலகிரி, திருவாரூர், தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தீபாவளி பண்டிகை நாளான நாளையும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தெற்கு அந்தமான் தென்கிழக்கு, வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றும், 18 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார் .
கனமழை அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று அவசர கால மேம்பாட்டு மையத்தின் நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.
மேலும் கோவை, நீலகிரி, திருவாரூர், தேனி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. தேனி, நீலகிரியில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வரும் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன” என தெரிவித்தார்.
