பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அன்றைய தினம் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம் பெற உள்ளன.
இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி ஜனவரி 23-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அக்கூட்டத்தில் அதிமுக- பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஒரு சேர மேடையேறுவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மோடியின் வருகையை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குழுக்களை அமைத்துள்ளார். அதில், “கூட்டம் திரட்டல் குழு” என ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொன். ராதாகிருஷ்ணன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட 30 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். மோடி கூட்டத்துக்கான ‘ஆட்களை திரட்டுவதற்கான’ பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும்.

அதேபோல மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ‘ஏற்பாடுகள் குழு’வையும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
