தமிழகத்தில் கனமழை மற்றும் டித்வா புயலின் தாக்கம் காரணமாக பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் திருநாளான இன்று (ஜனவரி 15) நிவாரண தொகை அறிவித்துள்ளார்.
2025-2026ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் சேதமடைந்தன.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அப்போது, பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு, நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டருக்கு ரூ. 20,000/- வழங்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில் டித்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜனவரி 15) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 இலட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒப்பளிக்கப்பட்ட நிவரணத்தொகையான ரூ.111.96 கோடி அரியலூர். செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி. கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம். நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளுர், திருவாரூர், தூத்துக்குடி. திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
