இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், நேற்று திடீரென பிரதமர் மோடியை ’நண்பன்’ என குறிப்பிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனையடுத்து அவருக்கு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 6)அளித்துள்ள ரிப்ளை உலக நாடுகளிடையே கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை 50% ஆக உயர்த்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதன்மூலம் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை முறிக்க வேண்டுமென இந்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதற்கு மாறாக ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருங்கிய நட்பை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பேசாமல் இருந்து வந்த சீனாவுடன் நட்புறவு பாராட்டிய மோடி, சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டிலும் பங்கேற்றார். இதனால் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளான சீனா – இந்தியா இடையேயான உறவு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் பிரதமர் மோடி குறித்து பேசி வந்த தொனியை மாற்றி மீண்டும் நட்பு வலையை வீசியுள்ளார்.
அவர், “நான் எப்போதும் அதனை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இது பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இங்கு வந்து சென்றார்” என டிரம்ப் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று தனது எக்ஸ் பக்கத்தில், “ட்ரம்பின் உணர்வுகளையும், நமது உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் நான் ஆழமாகப் பாராட்டுகிறேன். இந்தியா மற்றும் அமெரிக்கா மிக நேர்மறையான மற்றும் முன்னோக்குச் சிந்தனை கொண்ட, விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.