ஒரு மாதத்தில் இந்த SIR படிவங்களை கொடுத்து பணிகளை செய்ய முடியாதா ? 8 நாட்களில் இந்த படிவத்தை அனைவருக்கும் கொடுத்து விட முடியும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “SIR பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 8 முறை இது நடந்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இறந்தவர்கள் பல்லாயிர கணக்கானவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் பெயர் உள்ளது. வெளிநாடு,வெளியூர் போனவர்கள் பெயரும் இந்த பட்டியலில் இருக்கின்றது. முறைகேடாக இருக்கும் வாக்காளர்கள் விடுவிக்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் பட்டியல் வெளியிட வேண்டும். இதற்காகவே SIR கொண்டு வரப்பட்டுள்ளது. இதை திமுக எதிர்க்கிறது. SIR என்றாலே திமுகவினர் அலறுகின்றனர்.
8 நாட்கள் போதும்
ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு BLO அதிகாரி நியமிக்கபட்டுள்ளனர். இதில் முறைகேடு, காலதாமதம் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. ஒரு பாகத்தில் இருக்கும் வாக்காளர்களுக்கு 5 நாளில் பூத் சிலிப் கொடுக்கின்றனர். ஒரு மாதத்தில் இந்த SIR படிவங்களை கொடுத்து பணிகளை செய்ய முடியாதா ? 8 நாட்களில் இந்த படிவத்தை அனைவருக்கும் கொடுத்து விட முடியும் என்றார்.
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் SIR ஐ எதிர்ப்பதன் நோக்கம் இறந்தவர்கள் பட்டியலில் இருந்து பெயரை எடுத்து விடக்கூடாது. தேர்தல் நாளில் இறந்தவர்கள் எழுந்து ஓட்டு போட வந்து விடுகின்றனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் திமுகவினர் வேண்டுமென்று திட்டமிட்டு தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்றார்.
வாக்காளர்கள் நீக்கப்பட வில்லை.
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் இடைதேர்தல் நடத்த போது, அங்கு குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடித்தும் அந்த தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்படவில்லை. அது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கைகள் இல்லை. இன்று வரை அந்த இடிக்கப்பட்ட கட்டிடத்தில் வசித்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்கிறது.
SIR தொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ள வழக்கில் எங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு அளித்துள்ளோம். தவறான தகவலை திமுக பதிய வைத்தால் அதை சரி செய்ய வேண்டும், உண்மை நிலையை எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் நாங்களும் மனு தாக்கல் செய்துள்ளோம். இல்லையெனில் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தகவலை நீதிமன்றத்தில் பதிவு செய்து விடுவார்கள் என்றார்.
BLO போகும் போது ஆளுங்கட்சியினர் உடன் செல்கின்றனர். ஒட்டு மொத்தமாக படிவங்களை வாங்கி கொள்கின்றனர். இதை எல்லாம் வழக்கு வரும் போது நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றார். BLO தான் வாக்காளர்களை சந்தித்து படிவம் கொடுக்க வேண்டும். இது சரியாக நடக்கா விட்டால் உண்மையான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியாது”என்றார்.
