ராஜன் குறை
தொன்மையான தமிழ் பண்பாடு உலக சிந்தனைக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் இரண்டினை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அது ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளும், பெரியாரின் சிந்தனைகளும் எனலாம். திருவள்ளுவர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். லண்டனில் முதல்வர் ஸ்டாலின் திருக்குறளை 1886-ஆம் ஆண்டே மொழியாக்கம் செய்த ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அதனால் திருக்குறள் உலகில் பரவலாக அறியப்பட்டது.
பெரியாரைப் பொறுத்தவரை அவர் தன் சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஒரு சில பிரசுரங்கள் அவர் பெயரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரிவான அரசியல் தத்துவ நூலாகவோ, சித்தாந்த நூலாகவோ எழுதவில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களிடையே பிரசாரம் செய்து பெரும் சிந்தனைப் புரட்சியை பொதுமன்றத்தில் உருவாக்கியவர். செயல்முறை தத்துவம் (philosophical praxis) என்பதை மேற்கொண்டவர். கற்றோருக்கான நூல்களை எழுதுவதைவிட, அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்து சுயமரியாதையை சுடர் விடச் செய்வதையே அவர் முக்கியப் பணியாகக் கருதினார்.
அவர் வாழ்நாளிலேயே அவர் உரைகளின் எழுத்து வடிவங்களும், எழுத்துக்களும் தொகுக்கப் பட்டு வெளிவந்தாலும் அவை மொழியாக்கம் செய்யக் கடினமானவை என்பதால் பெருமளவு அவ்விதம் நடந்து வெளியுலகில் பரவவில்லை. மேலும் கல்விப்புலத்தில் நிறைந்திருந்த பார்ப்பனர்களுக்கும், பிற மேல் தட்டினருக்கும் அவரைக் குறித்த சரியான புரிதல் இல்லை. இட து சாரி சிந்தனையாளர்கள் பலருக்கும் கூட அவரைக் குறித்த சரியான புரிதல் இருக்கவில்லை. அதனால் அவருடைய அளப்பரிய அரும்பணி, மானுடவரலாற்றில் அவர் உருவாக்கிய தனித்துவமிக்க சிந்தனைப் புரட்சியின் சிறப்பம்சங்கள் உலக அரங்கில் விவாதிக்கப்பட கணிசமான காலதாமதம் ஆகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடியும்.
அப்படி அறியப்படவேண்டிய சிறப்பம்சங்கள் என்ன என்பதையும் சுருக்கமாக க் கூறிவிடுவோம். பெரும்பாலான உலகத் தலைவர்கள் மக்களை திரட்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் அல்லது தேசிய விடுதலையை சாதித்து புதிய அரசுருவாக்கத்திற்கு வகை செய்வார்கள். இதற்கு மாறாக பெரியார் மக்களின் சிந்தனையிலே புரட்சிகர மாற்றத்தை உருவாக்கி, புதிய விழுமியங்களின் அடிப்படையிலே குடியரசை உருவாக்க முயற்சித்தார். இதனை சமூக சீர்திருத்தம் என்று சொல்லிவிட முடியாது. புதிய குடியரசின் அடித்தளத்தை உருவாக்குதல்.
இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய சமூகத்தில் பரவலாக வேரூன்றிய வர்ண தர்ம சிந்தனையை, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும், பிறப்பையே தண்டனையாக்கும் வர்ண தர்ம சமூக ஒழுங்கை முற்றிலும் அகற்றி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப சமத்துவ விழுமியத்தை நிலைநிறுத்துவதே அவர் மேற்கொண்ட சிந்தனைப் புரட்சியின் அடிப்படை. அவருடைய பணியின் விளைவாக “திராவிட-தமிழர்” என்ற ஒரு மக்கள் தொகுதி தன்னுணர்வு பெற்று பிராமணீய கருத்தியல் மேலாதிக்கத்தினை (Brahmin Hegemony) மறுதலிக்கும் ஆற்றலுடன் செயல்படுவது சாத்தியமானது. இருப்பினும் இந்திய ஒன்றிய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் உருவாக்கும் தளைகளை மீறி இந்த மக்கள் தொகுதி தொடர்ந்து தன் இலட்சியத்தை அடைய போராடி வருகிறது.
இந்த உண்மை, பெரியார் மக்களின் சிந்தனைப் புரட்சியை நாடியவர், தேசிய அரசை உருவாக்க முனையாமல், குடியரசு விழுமியங்களை நிறுவ முயன்றவர், அதன் மூலம் மக்களின் மன ங்களிலே சுயமரியாதைக் கனலை உருவாக்கியவர் என்ற உண்மை இன்னம் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. தேசிய அரசை உருவாக்குபவர்களே வரலாற்றில் கவனம் பெறுவார்கள் என்பதால் பெரியாரின் சிந்தனைப் புரட்சி போதிய கவனம் பெறவில்லை என்றும் கூறலாம்.
ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் பேரொளி எல்லை கடந்தும் வீசத் துவங்கியுள்ளதை வியப்பதற்கில்லை. இந்த கருத்தரங்கத்தை ஒருங்கமைத்த அமைப்பு எது, பங்கேற்ற அறிஞர்கள் யார், யார் என்பதை நாம் சுருக்கமாக அறிய வேண்டும்.

இரு நாள் கருத்தரங்கம்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பல்வேறு துறைகளும், 36 கல்லூரிகளும் அடங்கியுள்ளன. அவற்றில் ஒரு கல்லூரிதான் செயிண்ட் ஆண்டனி கல்லூரி. அதில் உள்ள ஆசிய ஆய்வு மையம் “சுயமரியாதை இயக்கமும், அதன் தாக்கங்களும்” (Self Respect Movement and its Legacies) என்ற தலைப்பில் ஒருங்கமைத்த கருத்தரங்கம் செப்டம்பர் 4,5 தேதிகளில் நடந்தேறியது. அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் ஜிம் மாலின்சனும், ஃபைசல் தேவ்ஜியும் இந்த கருத்தரங்கின் அமைப்பாளர்கள் ஆவார்கள். இந்த கருத்தரங்கம் குறித்த செய்திகள் பல்வேறு நாளேடுகளிலும் இடம்பெற்றுள்ளன.
உலகின் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள் பலர் இதில் பங்கேற்று கட்டுரைகள் வாசித்துள்ளனர். அபிமன்யு ஆர்ணி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம்; கணேஷ்வர், ஹைதராபாத் பல்கலைகழகம்; சுந்தர் சருக்காய், பேர்ஃபுட் பிலாசஃபர்; எஸ்.ஆனந்தி, எம்.ஐ.டி.எஸ்; கிருபா முனுசாமி, மிடில்சக்ஸ் பல்கலைகழகம்; விக்னேஷ் ராஜாமணி, கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; கார்த்திக் ராம் மனோஹர், நேஷனல் லா ஸ்கூல்; ஜெ.ஜெயரஞ்சன், தமிழ்நாடு மாநில திட்டக்குழு; ஆ.இரா.வெங்கடாசலபதி, எம்.ஐ.டி.எஸ்; கிறிஸ்டொஃபே ஜெஃபர்லோ, சையின்ஸ் போ, பாரிஸ்; சூரஜ் யாங்டே, ஹார்வார்டு பல்கலைகழகம்; பிரான்சிஸ் கோடி, டொராண்டோ பல்கலைகழகம்; மார்த்தா ஆன் செல்பி, ஹார்வார்டு பல்கலைகழம்; சாரா ஹோட்ஜஸ், கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; சுமதி ராமசாமி, டியூக் பல்கலைகழகம்; தாரிணி அழகர்சாமி, சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகம்; கமலா விஸ்வேஸ்வரன், ரைஸ் பல்கலைகழகம்; சரோஜ் கிரி, டெல்லி பல்கலைகழகம் என முன்னணி ஆய்வாளர்கள் பங்கேற்று பங்களித்துள்ளனர்.
இந்த சிறப்புமிக்க கருத்தரங்கின் பகுதியாகத்தான் செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியுள்ளார். பகுத்தறிவுப் பகலவன் பெரியார் திருவுருவப் பட த்தைத் திறந்து வைத்துள்ளார். செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை இறுதிச் சிறப்புரையை புகழ்பெற்ற மூத்த மானுடவியல் ஆய்வாளர், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அர்ஜுன் அப்பாதுரை அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிகழ்வுகளின் பகுதியாக கார்த்திக் ராம் மனோஹரனும், ஆ.இரா.வெங்கடாசலபதியும் தொகுத்துள்ள கேம்பிரிட்ஜ் கம்பேனியன் டு பெரியார் என்ற ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் குறித்த ஆய்வுப்புலத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமையக்கூடிய நூல் இது எனலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வில் முதல்வர் பங்கேற்றது, பெரியார் பட த்தை திறந்துவைத்ததும் திராவிட மாடல் அரசின் சித்தாந்த வேர்களை எடுத்துரைக்கும் சிறப்பு வாயந்தது. சுயமரியாதை என்ற சொல்லின் சிறப்பினை முதல்வர் எடுத்துரைத்து உரை நிகழ்த்தியுள்ளதை காணொலிகளில் காண முடிகிறது. திராவிடவிய அரசியலின் வரலாற்றுத் தொடர்ச்சியில் மற்றொமொரு மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைகிறது என்றால் மிகையாகாது. முதல்வருடன் மனு ஜோசப் உள்ளிட்ட திராவிட இயக்க ஆர்வலர்களும் பங்கேற்றுள்ளனர்.

பாஜக ஏன் பெரியாரை எதிர்க்கிறது?
இந்த நிகழ்ச்சி தரும் எழுச்சியை சகிக்க முடியாமல் பாஜக தலைவர் தமிழிசை பேசியுள்ள ஒரு காணொலி ஓன்று இணையத்தில் பரவலாகக் கிடைக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமே நடத்தவில்லை, அந்த வளாகத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்து தி.மு.க நட த்தியுள்ளது என்றெல்லாம் பேசியுள்ளார். இதே போன்ற தகவலை தினமலர் நாளேடும் காணொலியாக வெறியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்விற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று வலியுறுத்திச் சொல்கிறார்கள். கல்யாண மண்டபத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுப்பதுபோல தி.மு.க-வினர் வாடகைக்கு எடுத்து அதனை ஆக்ஸ்போர்டு பல்கலைகழக நிகழ்ச்சி என்று பொய் பிரசாரம் செய்வதாகக் கூறுகிறார்கள்.
முதலில் சுயமரியாதை உள்ள தமிழர்களாக நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரியாரைக் குறித்து கருத்தரங்கம் நட த்துவதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமையே தவிர, அதனால் பெரியாருக்கோ, தி.மு.க-விற்கோ தனியான பெருமை எதுவும் சேரப்போவதில்லை. திராவிட இயக்கத்தின் பெருமையெல்லாம் தமிழ் சமூகத்தை வர்ண தர்மத்தின் பிடியிலிருந்து விடுவித்து மானமுள்ள, சுயமரியாதையுள்ள தன்னுணர்வு பெற்ற சமூகமாக மாற்றி வருவதுதான். உலக வரலாற்றை படிப்பதற்குத்தான் பல்கலைகழகமே தவிர, பல்கலைகழகத்திற்காக வரலாறு நிகழ்வதில்லை.
அடுதத்ததாக நாம் மேலே சொன்னபடி கருத்தரங்க நிகழ்வுகளை தெளிவாக நாளேடுகளில் வாசித்து அறியலாம். நாம் சொன்ன பேராசிரியர்கள் மேடையில் முதல்வருடன் அமர்ந்திருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அரங்கத்தை வாடகைக்கு எடுத்ததுபோல பேராசிரியர்களாக யாரேனும் நடிக்கிறார்கள் என்றும்கூட சொல்வார்கள். அந்த பேராசிரியர்கள் நாம் நன்கு அறிந்தவர்கள்தான். அவர்கள் பெயர்களை கூகுள் செய்து அவர்கள் புகைப்படங்களைப் பார்த்துத் தெளியலாம். இவ்வளவு மலினமான பொய் பிரசாரத்தை ஏன் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் கேள்வி.
இந்தக் காழ்பிற்கு விடை தேடுவது கடினமல்ல. அதையும் இந்த கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோம். வர்ண தர்மத்தை இந்தியக் குடியரசு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றவர் பெரியார். அதனையே குடியரசின் அடிப்படையாக க் கொள்ள வேண்டும் என்றவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தவாதி கோல்வால்கர்.
பொதுவாகவே இந்திய தேசியவாதிகள், சிந்தனையாளர்கள் பலரும் உறுதிபட மனு ஸ்மிருதி முன்வைக்கும் வர்ண தர்மத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று கூறியதில்லை. அவ்விதம் கூறுவது அந்த தர்மத்தை சமஸ்கிருதத்தில் எழுதி, இன்று வரை தங்களை அதன்படி உயர் பிறப்பாளர்களாக க் கருதிக்கொள்ளும் பிராமணர்களை வருந்தச் செய்யும் என்பதால் சற்றே நீக்கு போக்காகத்தான் அதைப்பற்றிப் பேசுவார்கள். அதனை முற்று முழுதாக எதிர்த்து பேசியவர்கள் பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகிய பேராளுமைகள்தான்.
பெரியார் அதனை பெரியதொரு மக்கள் இயக்கமாக மாற்றி. திராவிடர் கழகம் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக விட்டுச் சென்றுள்ளார்.அது இன்றுவரை வர்ண தர்ம மீட்பு வாத த்துடன் போராடுகிறது. அதுதான் அவர்களுக்கு இந்த காழ்ப்பு. இந்த மையப் பிரச்சினையை மறைத்து கடவுள் நம்பிக்கை, இந்து மதம் என்று ஏதேதோ பேசுவார்கள். ஆனால் திராவிட-தமிழ் மக்கள் ஏமாறுவதில்லை. அவர்கள் விரும்பும் தெய்வங்களை வழிபடுவார்கள்; பெரியாரின் சுயமரியாதை தத்துவத்தையும் புரிந்துகொள்வார்கள்.
பிரச்சினை மனிதர்களுக்குள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கூடாது என்பதுதானே தவிர கடவுளை வணங்குவது இல்லை. கடவுள் பெயரால் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வை உருவாக்குவதால்தான் பெரியார் கடவுளின் இருப்பையும் கேள்விக்கு உள்ளாக்கினார். அவர் அதையே தெளிவாக விளக்கவும் செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அனைத்து சமூகத்தையும் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் அவரைக் கொண்டாடவே செய்தனர். புகழ்பெற்ற எழுத்தாளர் பார்ப்பன வகுப்பைச் சார்ந்த வ.ராமசாமி, 1944-ஆம் ஆண்டு வெளியான தமிழ் பெரியோர்கள் என்ற நூலில் பெரியாரையே முதலில் சிறப்பித்து, கொண்டாடி எழுதியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியும் வர்ண தர்ம பித்தை அகற்றிவிட்டு, திராவிட நெறியான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். அதுவே உண்மையான தேச நலனாக இருக்கும். அப்போது பெரியாரும் தேசியத் தலைவராகத் தெரிவார்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com