தமிழில் விஷாலுக்கு ‘ஆக்ஷன் ஸ்டார்’ இமேஜ் தந்த திரைப்படமாக அமைந்தது லிங்குசாமியின் ‘சண்டக்கோழி’. ஆனால், அவரது மூன்றாவது படமாக அமைந்த ‘திமிரு’தான் அவருக்குப் பெரிய ‘ஓபனிங்’கை தந்தது. தருண் கோபி இயக்கிய அந்தப் படத்தில் நாயகியாக நடித்த ரீமா சென்னை காட்டிலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி தான்.
எஸ்எஸ் மியூசிக் சேனலில் விஜே ஆக இருந்த ஸ்ரேயா ரெட்டி முதலில் அறிமுகமான படம் ‘சாமுராய்’. பிறகு தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்தவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தது ‘திமிரு’. பிறகு ‘வெயில்’, ‘பள்ளிக்கூடம்’, ‘காஞ்சீவரம்’ படங்களில் நடித்தார்.
‘திமிரு’ படத்தைத் தயாரித்த விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவைக் கல்யாணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமெலியா என்றொரு மகள் இருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு கணவரோடு சேர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்ட ஸ்ரேயா, பிறகு ‘சில சமயங்களில்’ மற்றும் ‘சலார்’ படங்களில் தலைகாட்டினார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்போது பவன் கல்யாணின் ‘ஓஜி’ படத்தில் நடித்திருக்கிறார். ’சாஹோ’ இயக்குனர் சுஜித் இதனை இயக்குகிறார். இப்படத்தின் முழுப்பெயர் ‘தே கால் ஹிம் ஓஜி’. நீண்ட நாட்களாகத் தயாராகி வரும் இப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது.
இதில் ’கீதா’ எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. இதன் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் ரசிகர்களிடையே ‘வைரல்’ ஆகி வருகிறது.
‘புஷ்பா’ முதல் பாகத்தில் வந்த அனுசுயாவின் பாத்திரம் போல, இதில் ஸ்ரேயா அதகளப்படுத்துவார் என்று கொண்டாடி வருகின்றனர் பவன் கல்யாண் ரசிகர்கள்.