பகுதி நேர ஆசிரியர்கள் 10ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவை எடுப்பார் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். part time teachers strike
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் சுமார் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 ஆண்டுகளாக ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டது.
2021 தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி 181ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 8ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 10ஆவது நாள் போராட்டத்தின் போது பகுதிநேர ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை காவல்துறையினர் தினசரி கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவிடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் கீழ்கதிர்பூர் கிராமத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பகுதி நேர ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார்” என்று கூறினார். part time teachers strike