சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ (1952) என்ற பெயரைத் தலைப்பாக வைப்பதே ஒரு மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை ஏற்று, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் களமாகக் கொண்டு, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் ‘பராசக்தி‘. சிவகார்த்திகேயன், ரவி மோகன் (ஜெயம் ரவி), ஸ்ரீலீலா நடிப்பில் இன்று (ஜனவரி 10) பொங்கல் வெளியீடாக வந்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?
கதைக்களம்: ஒன்றிய அரசில் வேலை செய்யும் சிவகார்த்திகேயன், 1965-ல் நடக்கும் இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் எப்படி ஈர்க்கப்படுகிறார் என்பதே கதை. அரசியல் விழிப்புணர்வுடன் தொடங்கும் போராட்டம், ஒரு கட்டத்தில் அதிகார வர்க்கத்திற்கும் (ரவி மோகன்) அவருக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக மாறுகிறது.
சிவகார்த்திகேயன்: தனது வழக்கமான என்டர்டெயினர் பாணியை விட்டுவிட்டு, ஒரு சீரியஸான மாணவர் தலைவனாக மாற முயன்றுள்ளார். அவரது முயற்சி பாராட்டுக்குரியது. குறிப்பாக இன்டர்வல் காட்சியில் அவர் எடுக்கும் முடிவு கவனிக்க வைக்கிறது.
ரவி மோகன் (ஜெயம் ரவி): அதிகாரியாக வரும் இவரது கம்பீரமான நடிப்பு படத்திற்குத் தேவையான எடையைக் கூட்டுகிறது.
ஸ்ரீலீலா & அதர்வா: ஸ்ரீலீலாவின் காதல் காட்சிகள் படத்தின் வேகத்தைக் சற்று குறைப்பதாக இருந்ததாலும், கிளைமாக்சில் கைதட்டல் பெறுகிறார். அதர்வா, அண்ணன் தம்பி சென்டிமென்ட் காட்சிகளில் மட்டும் ஆறுதல் தருகிறார்.
சேத்தன், குருசோமசுந்தம் போன்ற திறமையான நடிகர்களை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம். மற்ற மொழி உச்ச நடிகர்களின் கேமியோ கூடுதல் பலம்.
திரைக்கதை: இயக்குநர் சுதா கொங்கரா, மாணவர் புரட்சி மற்றும் அதிகார வர்க்கத்தின் பார்வை என இரு வேறு களங்களை ஒரே நேர்க்கோட்டில் இணைக்க முயன்றுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து, ‘பேரலல் ஸ்டோரி டெல்லிங்’ (Parallel Storytelling) பாணியில் கதையை நகர்த்திய விதம் ஒரு வித்தியாசமான முயற்சிதான்.
இருப்பினும், இந்த இரட்டைப் பயணம் திரையில் முழுமையாக ஈர்க்கத் தவறியுள்ளது. கதை யாருடைய பார்வையில் பயணிக்கிறது என்ற குழப்பம் நமக்கு எழுவதோடு, சில தருணங்களில் நாயகனை விட ரவி மோகனின் ஆளுமை ஓங்கி நிற்பது போன்ற உணர்வைத் தருகிறது. இந்த இணை கோட்டுப் பயணம் திரைக்கதையின் ஓட்டத்தில் ஆங்காங்கே சிறு தொய்வை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.
இயக்கம் மற்றும் இசை: ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களைக் கொடுத்த சுதா கொங்கராவிடம் இருந்து இன்னும் சிறந்த திரைக்கதையை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 1960-களின் மெட்ராஸ் செட் அமைப்புகள் சிறப்பாக உள்ளன. சில இடங்களில் கலைஞர்களிடமிருந்து அவர்களின் உச்ச நடிப்பை வாங்காமல் விட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் அங்கங்கே ஏற்படுகிறது. அது சில காட்சிகளை செயற்கையாக மாற்றிவிட்டது.
ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால், இது போன்ற ஒரு தீவிரமான போராட்டக் களத்தைக் கொண்ட படத்திற்குத் தேவையான வீரியமிக்க, ரத்தத்தை சூடேற்றும் புரட்சிப் பாடல்கள் (Revolutionary Songs) படத்தில் இல்லை என்பது பெரிய ஏமாற்றம். பின்னணி இசை சில இடங்களில் கை கொடுத்தாலும், பாடல்கள் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன.
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: 60களின் இந்தியாவை கண் முன் திரையில் கொண்டுவந்துள்ளார் ரவி.கே.சந்திரன். சென்சாரில் அமைதியாக்க பட்ட வார்த்தைகளை சரிசெய்ய சில எடிட்டிங் அங்கங்கே தனியாக தெரிந்தது ஒரு பெரிய மைனஸாக இருந்தது.
தீர்ப்பு: பழைய ‘பராசக்தி’ ஏற்படுத்திய தாக்கத்தை இந்த பராசக்தி இப்போதுள்ள ஜெனெரேஷன் மக்களுக்கு ஏற்படுத்துமா(தீ பரவுமா?) என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
