நூமான் அலியின் அபார சுழற்பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை இன்று (அக்டோபர் 15) வீழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 378 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்தார். அதேபோன்று கேப்டன் சான் மசூத் 76 ரன்களும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 75 ரன்களும், சல்மான் அலி ஆகா 93 ரன்களும் குவித்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில், சுழற்பந்து வீச்சாளர் செனுரான் முத்துசாமி அபாரமாகப் பந்து வீசி 6 விக்கெட்டுகளைக் (6/117) கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் டோனி டி சோர்சி சதம் (104 ரன்கள்) அடித்த போதும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து 109 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 167 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் ஒற்றை ஆளாக இளம் வீரர் டிவால்ட் பிரவீஸ் (54) போராடினார். எனினும் நூமான் அலியின் அபார சுழலில் சிக்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதானால் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது பாகிஸ்தான் அணி. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 39 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூமான் அலியின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்காவின் 10 போட்டிகள் கொண்ட தொடர்ச்சியான டெஸ்ட் வெற்றி முடிவுக்கு வந்தது.
இத்தொடரில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது.