ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், சென்னையில் தாரா அறக்கட்டளை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜி.ஆர். சுவாமிநாதன், சனாதன தர்மம் குறித்து பேசுகையில், “பொது கடமைகளைச் செய்யும்போது சனாதன தர்மத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது வாழ்வில் ஒருவரது பங்கையோ குணத்தையோ வெறும் தொழில் ரீதியான அறிவு மட்டும் வரையறுக்காது. இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் முழுமையாகப் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். சனாதன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாகப் பணியாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸில் வெளியிட்ட பதிவில், “சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. சாதிக்கொரு நீதி சொல்வது. இந்திய அரசியல் சாசனம் இதற்கு நேர் எதிரான விழுமியங்களைக் கொண்டது. சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியிருப்பதால், அவர் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
