நாடு முழுவதும் இன்று இண்டிகோ விமான நிறுவனத்தின் உள்ளூர் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. நாள் ஒன்றுக்கு சுமார் 2200க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. நேற்று மூன்றாவது நாளாக திட்டமிட்டபடி விமானங்கள் இயக்குவதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டது. விமான பணியாளர்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதுமையான கடுமையான விமான பணி நேரம் மற்றும் ஓய்வு விதிகளை பின்பற்றுவதில் போதிய எண்ணிக்கையிலான விமானிகள் இல்லாததால் இண்டிகோ நிறுவனம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக போக்குவரத்து அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் விமான சேவைகளை பாதிக்கும் முக்கிய காரணியாக மாறி உள்ளது. இதன் காரணமாக 1200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் கடந்த நவம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நேற்று மட்டும் தலைநகர் டெல்லி, மும்பை பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் சுமார் 550க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சர்வீஸ்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும், மும்பை விமான நிலையத்தில் 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும்,ஹைதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் 35 விமானங்களும், சென்னையில் இருந்து 26 விமானங்களும், கோவாவில் 11 விமானங்களின் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று நள்ளிரவு வரை தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து இயங்கும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இண்டிகோ விமானத்திற்கு வரும் பயணிகளை சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என சிஐஎஸ்எப் படைக்கு இண்டிகோ நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் உள்ளூர் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடுமுழுவதும் இன்று ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
