தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கில் நகை திருட்டு புகார் அளித்த போராசிரியர் நிகிதா நேரில் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் மாதம் சாமி தரிசனம் செய்ய வந்த பேராசிரியர் நிகிதா, தனது நகை காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த தனிப்படை போலீசார், அஜித்குமார் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதால் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து, மானாமதுரை தனிப்படை போலீசார் ஐந்து பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசு அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது.
சிபிஐ விசாரணை நடத்தி, மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அதிகாரிகள் உள்ளிட்ட 10 போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த நான்காம் தேதி நடந்த விசாரணையின்போது, அஜித்குமார் கொலை வழக்கில் நகை திருட்டு என்பது பொய் புகார் என சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதி கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நிகிதா நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
