“டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” ஸ்டாலின் குறித்து ஓபிஎஸ் பதில்

Published On:

| By Pandeeswari Gurusamy

OPS

டெல்லி என்ன, அமெரிக்காவே மிரட்டினாலும் முதல்வர் எந்த காலத்திலும் பணிய மாட்டார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், சிவகங்கையில் இன்று (மார்ச் 22) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பல்வேறு அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியது குறித்து திமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிடுகிறது” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் , “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார். ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் வரை தமிழ்நாடு என்றென்றும் தலைகுனியாது.” என்றார்.

ADVERTISEMENT

தமிழக அரசு அதிகாரிகள்தான் திமுக ஆட்சியை நடத்துகிறார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “தமிழக அரசு ஒரு சிறப்பான அரசாகச் செயல்பட்டு வருகிறது. முதல்வர் மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருவதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “திமுகவில் பண்ணையார் ஆட்சி நடக்கிறது” என்று விமர்சித்தது குறித்த கேள்விக்கு,
“ஆதவ் அர்ஜுனா என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறார். இதில் யார் பண்ணையார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share