டிஜிட்டல் திண்ணை: திமுகவில் இணையும் ஓபிஎஸ்? கேட்ட பதவி- ஸ்டாலின் ‘ஷாக்’!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “ அரசியல் பொங்கல் ஜெகஜோதியாக இருக்கும் போல” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னப்பா.. புதுசா அரசியல் பொங்கல்னு சொல்றீரு?

ADVERTISEMENT

எலக்‌ஷன் காலமாச்சே.. நடக்குற ஒவ்வொரு சம்பவங்களும் அப்படித்தானய்யா இருக்கு… “திமுகவுக்கு தாவும் வைத்தி, வெல்லமண்டி”ன்னு எழுதி இருந்தோம் இல்லையா.. அதுல பெரிய ட்விஸ்ட் தகவல் இருக்குய்யா..

என்னய்யா.. அமர்க்களமா ஆரம்பிக்கிறீரு..

ADVERTISEMENT

ஆமாய்யா.. வைத்திலிங்கமும், வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் சேர பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்கிற நேரத்துல ஓபிஎஸ் பற்றியும்தான் பரபரப்பு தகவல் வந்திருக்கு..

ஓபிஎஸ் தன்னோட ஆதரவாளர்களுடன் சென்னையில் டிசம்பர் 24-ந் தேதி ஆலோசனை நடத்தினாரு இல்லையா? அந்த கூட்டத்துல, “எடப்பாடி பழனிசாமின்னு பேரை சொல்லவே வெட்கமா இருக்கு” என்றெல்லாம் ஏகத்துக்கும் ஆவேசப்பட்டிருந்தார் ஓபிஎஸ். வைத்திலிங்கமும் எடப்பாடியை கடுமையாக விமர்சிச்சிருந்தாரு..

ADVERTISEMENT

இந்த கூட்டம் முடிந்த கையோடு தமக்கு நெருக்கமானவர்களிடம் ஓபிஎஸ் பேசும் டோனே வித்தியாசமாகிவிட்டதாம்.. “கலைஞர் சிஎம்மா இருந்தப்ப அசெம்பிளியில ஒருநாள் என்கிட்ட துரைமுருகன் தனியா வந்து பேசுனாரு.. அப்ப, ‘உங்க மேல ஒரு கேஸ் பைல் என்கிட்ட வந்தது.. நானும் சைன் பண்ணி சிஎம்-க்கு அனுப்பி வைச்சேன்.. ஆனால் தலைவரோ, “ஓபிஎஸ் நம்ம சூத்திர சிஎம்.. அவர் மேல ஆக்‌ஷன் எடுக்கிறதா?”ன்னு சொல்லி அந்த பைலையே ஒதுக்கி வைச்சுட்டாரு..” என சொன்னார்.. அந்த அளவுக்கு ‘கலைஞர்’ என் மேல ரொம்பவே பாசமா இருந்தாரு”ன்னு உருக்கமாக தமது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் பேசியிருக்கிறார்..

இதுக்குப் பிறகுதான், ஓபிஎஸ் சில விஷயங்களை அவங்ககிட்ட வெளிப்படையாகவும் ஷேர் செஞ்சிருக்காரு.. இதை பத்தி ஓபிஎஸ்-க்கு மிக நெருக்கமானவங்ககிட்ட நாம பேசுனப்ப, ”டிசம்பர் கடைசியில சென்னையில நடந்த ஆலோசனைக் கூட்டத்துல எங்க எல்லார்கிட்டயும் ஒரு துண்டு சீட்டை கொடுத்து நாம எந்த கூட்டணிக்கு போகலாம்னு டிக் பண்ணி தர சொன்னாரு.. அந்த துண்டு சீட்டுல D, T-ன்னு எழுதி இருந்துச்சு.. D- DMK: T- TVK.. நாங்களும் டிக் செஞ்சு கொடுத்துட்டோம்.. அதுல பெரும்பகுதியானவங்க விஜய் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம்னு சொல்லி இருந்தோம்..

ஆனா, அண்ணனுக்கோ வைத்திலிங்கம் போன்றவங்களுக்கோ விஜய் கூட கூட்டணி சேர விருப்பம் இல்லைன்னு பின்னாடிதான் தெரிஞ்சுகிட்டோம்..

அதே நேரத்துல அண்ணன், கலைஞரைப் பத்தியும் திமுகவை பத்தியும் கரிசனையாகவும் பேசுனாரு… நாங்களும் என்னாண்ணே.. திமுகவை பத்தி பாசிட்டிவ்வா பேசுறீங்க?ன்னும் கேட்டே விட்டோம்..

அப்பதான், “திமுக சைடுல இருந்து நம்மகிட்ட பேசுறாங்கய்யா.. நாம திமுகவிலேயே சேரனும்னு விரும்புறாங்க.. நானும் சரின்னு பேசியிருக்கேன்.. நல்ல பதவியும் நம்ம ஆட்களுக்கு சீட்டும் கொடுத்தா ‘முடிவு எடுத்துடலாம்’னு இருக்கேன்னு ‘கூலாகவே’ சொன்னாரு.. நாங்களும் அப்படியா அண்ணேன்னு கேட்டுட்டு அடுத்த முடிவுக்காக வெயிட் பண்றோம் ” என்றனர்.

ஓஹோ.. ஓபிஎஸ் இப்படி முடிவு எடுத்துட்டாரா? சரி.. திமுக சைடுல என்ன சொல்றாங்க?

திமுக பக்கம் விசாரிச்சப்ப, “ஆமாங்க சார்.. ஓபிஎஸ் பேசிகிட்டுதான் இருக்காரு. எங்களைப் பொறுத்தவரைக்கும் விஜய் தவெக சைடு ஸ்டிரென்த் ஆகிடக் கூடாதுன்னுதான் சில மூவ் செஞ்சுகிட்டு இருக்கோம்.. அதனால ஓபிஎஸ்கிட்டயும் பேசுறோம்.. ஓபிஎஸ்ஸூம், திமுகவில் இணையறதுக்கு ”ஓகே”ன்னு சொன்னாரு..

ஓபிஎஸ்ஸோட முடிவை பத்தி சிஎம் ஸ்டாலின்கிட்ட சொன்னோம்.. ”ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரைக்கும், 2 முறை சிஎம்மா இருந்திருக்கேன்.. ஜெயலலிதா பீரியட்ல கட்சி பொருளாளராகவும் அவங்களுக்கு பின் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன்.. அந்த ‘ரேஞ்சுக்கு’ தகுந்த மாதிரி திமுகவுல ‘இணைப் பொதுச்செயலாளர்’ பதவி கொடுத்தா நல்லா இருக்கும்னு சொல்றாரு.. எலக்‌ஷனிலயும் எங்க ஆட்களுக்கு 10 சீட் வேணும்”னு கேட்கிறாருன்னும் சிஎம் கிட்ட சொன்னோம்..

ஒருநிமிஷம் சிஎம், அதிர்ச்சியாகத்தான் எங்களை பார்த்தாரு.. ‘இணைப் பொதுச்செயலாளர்‘ பதவியா? அப்படி ஒன்னு நம்ம கட்சியிலேயே இல்லையேன்னு சிஎம் சொன்னாரு..

அதோட, ”நம்ம கட்சியோட முக்கியமான 3 பதவிகள்னா தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் தான்.. இது எல்லாம் தேர்ந்தெடுக்கப்படுகிற பதவிகள்.. இந்த மூணுமே திமுகவிலேயே இருக்கிறவங்களுக்கு மட்டும்தான்.. திமுகவில் இருந்து வெளியே போயிட்டு திரும்ப வந்தவங்களுக்கோ, வேற கட்சியில இருந்து வந்தவங்களுக்கோ இல்லைன்னு நான் உறுதியாக இருக்கேன்.

வேணும்னா துணைப் பொதுச்செயலாளர் கொடுக்கலாமான்னு யோசிப்போம்”னு சொன்னார் சிஎம் ஸ்டாலின்” என்றனர்.

ஆஹா.. மூச்சுவிடாம சொல்லிட்டீரே..

பொறுமய்யா.. ஓபிஎஸ்கிட்ட பேசுன அதே திமுக டீம், டிடிவி தினகரன் கிட்ட ‘கூட்டணி’ பத்தி பேசிகிட்டு இருக்குய்யா..

இன்னைக்கு கூட தஞ்சாவூரில் டிடிவி தினகரனின் பொதுக்குழு தீர்மானத்தை பார்த்தீரா? அதுல, “ பிரிவினைவாத அரசியல் தமிழகத்தில் எக்காலத்திலும் எடுபடாது அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்”னு பாஜகவுக்கு எதிராகவே சொல்லி இருக்காங்க..

அதோட, “உங்களின் மன ஓட்டம் என்ன என்பதை அறிந்து நிச்சயம் வெற்றிக்கூட்டணியில் இணைவோம். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கூட்டணிக்கு தான் செல்ல இருக்கிறோம். தமிழ்நாட்டில் அமையப்போகும் கூட்டணி ஆட்சியில் அமமுக அங்கம் வகிக்கும்”ன்னும் ‘ட்விஸ்ட்டா’ தீர்மானம் போட்டிருக்காரு தினகரன்.

ஆமாய்யா.. நீர் சொன்ன மாதிரி ‘அரசியல் பொங்கல் ’ அமர்க்களம்தான்.. ஆமா.. அமித்ஷா வந்து போயிருக்காரே எதுவும் ஸ்பெஷல் ஐட்டம் இருக்கா?

புதுக்கோட்டை மீட்டிங்குக்கு அமித்ஷாதான் வர வாய்ப்பிருக்குன்னு நாம முன்னாடியே சொல்லி இருந்தோம்.. அதே மாதிரி அமித்ஷா வந்தாரு.. புதுக்கோட்டையில நயினார் பிரசார நிறைவு கூட்டத்துலயும் திருச்சியில மோடி பொங்கல் விழாவிலயும் கலந்து கிட்டாரு.. அமித்ஷாவோட விசிட் பாஜகவுக்கு ரொம்பவே ‘டானிக்’ மாதிரி இருக்குதாம்.. நாம பேசிய பாஜக மூத்த தலைவர்கள், “புதுக்கோட்டையில அமித்ஷாஜி மீட்டிங்குக்கு 25,000 பேரு வருவாங்கன்னு எதிர்பார்த்தோம்.. 17,000 பேர் வந்திருந்தாங்க.. இதுல ஹைலைட்டே அமித்ஷாஜி பேச்சுதான்.. திமுகவை பத்தி எங்களை விட ரொம்பவே அதிகமாக அட்டாக் செஞ்சு புள்ளி விவரத்தோட ஜி பேசுன பேச்சு இருக்கே.. அப்படியே சிலிர்த்து போச்சு எங்களுக்கு..

இறங்கி அடிக்கிறதுன்னா இதுதான்னு நல்லாவே புரிஞ்சது.. திமுக மினிஸ்டர்ஸோட ஊழல் எல்லாத்தையும் ஒவ்வொன்னா புள்ளி விவரத்தோட அமித்ஷாஜி பேசுனது… திமுகவோட வாரிசு அரசியலையும் விட்டு வைக்கலையே.. இந்துக்களோட உணர்வுகளுக்கு எதிராக எப்படி எல்லாம் திமுக அரசு இருக்குன்னு சொன்னாரு.. அதுவும் ராமர் கோவில் திறப்பு விழா அப்ப அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை திமுக அரசு அமல்படுத்துச்சுன்னு விளாசியது எல்லாம் எலக்‌ஷன்ல நாங்க எப்படி பிரசாரம் செய்யனும்னு எங்களுக்கு கிளாஸ் எடுத்த மாதிரி இருந்துச்சு” என்றனர்.

அமித்ஷா மேடையில அதிமுக தலைவர்களே இல்லைன்னும் நாம அவங்ககிட்ட கேட்டோம்.. அதுக்கு, “டெல்லியை பொறுத்தவரைக்கும் இது பாஜகவின் பங்ஷன்.. தமிழக தலைவர் நயினார் பிரசாரம் முடியுது.. அது பாஜகவின் நிகழ்ச்சி.. அதேபோல திருச்சி நிகழ்ச்சியும் பாஜகவோடது.. எங்க கட்சி நிகழ்ச்சியாதான் நடத்துறோம்.. அதனால அதிமுக லீடர்ஸை கூப்பிடலை.. இது பாஜக ஸ்டைல்சார்.. திமுக மாதிரி எல்லா கூட்டணி கட்சிகளையும் எல்லா மீட்டிங்குக்கும் நாங்க கூப்பிட மாட்டோம்.. திருச்சியில அமித்ஷாஜி வந்தப்ப விஜயபாஸ்கர்தான் வரவேற்றாரு..

அதுக்குப் பிறகு அமித்ஷா வழக்கம் போல பாஜகவின் உயர்மட்ட குழுவில இருக்கிறவங்களையும் சந்திச்சு டிஸ்கஷன் நடத்தினாரு.. இதுல பியூஷ் கோயல், மேலிட பொறுப்பாளர்கள், நயினார், அண்ணாமலை, பொன்னார், தமிழிசை, வானதி, எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், முருகானந்தம்னு 15 பேர் கலந்துகிட்டாங்க.. இந்த கூட்டத்துல, ”திமுக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அதிகமா இருக்கு.. விஜய் பேக்டரால நமக்கு எந்த இஸ்யூவுமே இல்லை.. திமுகவுக்குப் போகக் கூடிய ஓட்டுகளை, மைனாரிட்டி ஓட்டுகளைத்தான் விஜய் பிரிப்பாருன்னும் பேசுனாங்க..

இந்த கூட்டம் முடியுற வரைக்கும் அதிமுகவோட எஸ்.பி.வேலுமணி வெளியில வெயிட் பண்ணிகிட்டுதான் இருந்தாரு.. கூட்டம் முடிஞ்ச பிறகு அவரையும் கூப்பிட்டு நலம் விசாரிச்சு பேசிட்டுதான் அனுப்பி வைச்சாரு அமித்ஷா”ன்னு சொல்றாங்க என்றபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share