டிஜிட்டல் திண்ணை: ’வாரிசுகளுக்கு’ ஸ்கெட்ச் – திமுகவுக்கு தாவும் வைத்தி, வெல்லமண்டி – பரிதவிக்கும் ஓபிஎஸ்!

Published On:

| By Mathi

வைஃபை ஆன் செய்ததும், ‘அலை கரை சேரும் வரை காத்திரு கண்ணா..’ என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா யாருக்கு இந்த பாட்டு?

ADVERTISEMENT

உமக்குதான்யா.. தேர்தல் முடியும் வரை ‘விழித்திரு.. காத்திரு’..ன்னு சொல்ல வந்தேன்.. ஏன்னா விடிஞ்சும் விடிவதற்குள் அத்தனை மாற்றங்கள் ஜரூராக நடக்குதே..

அப்படியா ஆசானே.. நீர் ‘சேதி’யை சொல்லுமய்யா..

ADVERTISEMENT

சொல்றேன்யா.. அதிமுகவில் எப்படியாவது மீண்டும் சேர்ந்துவிட முடியும்; அமித்ஷா எப்படியும் சாதிச்சுகாட்டுவார்னு.. குறைந்தபட்சம் NDA கூட்டணிக்காவது கூப்பிடுவாங்கன்னு மலை போல ஓபிஎஸ் நம்பிகிட்டே காலத்தை ஓட்டிகிட்டு இருக்கிறாரு..

ஆனா, ஓபிஎஸ் கூட இருக்கிற யாருக்குமே எந்த நம்பிக்கையுமே இல்லை.. ஏற்கனவே மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு போயிட்டாரு.. ஜேசிடி பிரபாகர் தவெகவில சேர்ந்துட்டாரு.. இப்ப அங்க இருக்கிறது ஒரத்தநாடு வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பண்ருட்டியார் மட்டும்தான்..

ADVERTISEMENT

ஓபிஎஸ்-க்கு வலதும் இடதுமா இருக்கிறவங்க இந்த மூணு பேருதான்.. இதுல பண்ருட்டியார், எப்ப வேணும்னாலும் அரசியல் துறவறத்தை அறிவிக்கிற நிலையில இருக்கிறாரு..

வைத்திலிங்கத்தை பொறுத்தவரைக்கும் அதிமுகவுக்கே போகப் போறாருன்னு சொன்னாங்க.. விஜய்யை சந்திச்சு தவெகவுல சேரப் போறாருன்னும் சொன்னாங்க..

வைத்தியோ, இதை எல்லாம் திட்டவட்டமா மறுத்திருந்தாரு.. டிடிவி தினகரன் கூட, ‘அதெல்லாம் வைத்திலிங்கம் தவெகவுக்கு போகமாட்டாருன்னு சொல்லி இருந்தாரு’..

சரிய்யா.. இப்ப வைத்தி ஏதாவது முடிவு செஞ்சிட்டாரா?

ஆமாய்யா.. வைத்திலிங்கம் ‘இனியும் பொறுக்க வேண்டாம்னு’ முடிவெடுத்துட்டாராம்.. இதை பத்தி வைத்திலிங்கம் தரப்புல கேட்டப்ப, “ஓபிஎஸ்ஸை எவ்வளவு காலம் நம்புறதுன்னு அண்ணனுக்கு (வைத்தி) ரொம்ப காலமா கேள்வி இருந்துச்சு.. விஜய் கட்சியிலயும் பேசுனாங்கதான்.. அங்க போக அண்ணனுக்கு விருப்பம் இல்லை.. எடப்பாடி சைடும் பேசினாங்க.. அது ஒர்க் அவுட் ஆகலை.. இப்ப, “திமுகவுல நம்மகிட்ட பேசுறாங்கப்பா.. தம்பிக்கு (வைத்திலிங்கம் மகனுக்கு) ஒரத்தநாடு சீட் தர்றோம்னு சொல்றாங்க.. எனக்கு அது சரின்னுதான் தோணுது..”ன்னு அண்ணன் எங்ககிட்ட சொல்லிகிட்டு இருக்காரு” என்கின்றனர்.

வைத்திலிங்கம் மட்டுமல்ல.. வெல்லமண்டி நடராஜனும் கூட தனது ஆதரவாளர்கள்கிட்ட, ‘திமுகவுல கூப்பிடுறாங்க.. மகனுக்கு சீட் கொடுத்துடலாம்னு சொல்றாங்க’ என சொல்லிகிட்டு இருக்காரு..

இதனால வைத்திலிங்கமும், வெல்லமண்டி நடராஜனும் அண்ணா அறிவாலயத்துக்கு சீக்கிரமாக போவாங்களாம்…

அடடே.. அப்ப ஓபிஎஸ் கதி என்னவாகும்யா?

ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரைக்கும் ஒன்னுமே புரியலைன்னு ரொம்பவே தத்தளிச்சுகிட்டுதான் விரக்தியா இருக்கிறாரு.. ராஜ்பவன்ல நேத்து துணை ஜனாதிபதி சிபிஆர் வந்தப்ப டின்னர் கொடுத்தாரு ஆளுநர் ரவி.. அந்த இன்விடிஷேன்ல இபிஎஸ், ஓபிஎஸ் பேரும்தான் இருந்துச்சு.. ஆனா, ‘அங்க போய் என்ன ஆகப் போகுது?’ன்னு ஓபிஎஸ் போகாமலேயே புறக்கணிச்சுட்டாருப்பா..

சரிய்யா.. ஓபிஎஸ் என்னதான் செய்வாராம்?

ஓபிஎஸ் தரப்புல இதை பத்தி கேட்டப்ப, “அண்ணன் ரொம்பவே குழம்பித்தான் இருக்காரு.. கொஞ்சம் ஆறுதல் தர்றமாதிரி திமுக சைடுல இருந்து ஒரு தகவல் மட்டும் வந்துருக்கு.. ஒருவேளை திமுக கூட்டணியில இருந்து காங்கிரஸ் வெளியே போய் விஜய்யோட கூட்டணி வெச்சா எங்களை, டிடிவி தினகரனை, தேமுதிகவை கூட்டணியில சேர்க்கலாம்னு இருக்காங்களாம்.. அந்த ஆப்ஷனையும் விடக் கூடாதுன்னு அண்ணன் சொல்றாரு” என்கின்றனர்.

சரிய்யா போச்சு.. அமித்ஷாவோட விசிட்டுல என்ன விசேஷம்?

ஆமாய்யா.. நயினார் நாகேந்திரனோட பிரசாரம் நாளைக்கு புதுக்கோட்டையில முடியுது.. இந்த கூட்டத்துக்குதான் பிரதமரை கூப்பிட்டு வர்றலாம்னு நயினார் நினைச்சாரு.. ஆனா, “நயினார் நாகேந்திரன் இப்ப போன டூரில் ரொம்ப பெரிய எழுச்சி எல்லாம் இல்லை.. பெயிலியர்தான் போல.. இது பிஎம்-க்கும் தெரியும்.. புதுக்கோட்டையில நயினார் நடத்துற மீட்டிங்குல பிஎம் கலந்துக்கனும்னு நயினார் விரும்பினாலும் அப்செட்டில் இருக்கிறதால பிஎம் வர்றது கொஞ்சம் சந்தேகம்தான்.. அப்படி பிஎம் வராம போனால் அமித்ஷா ஜிதான் வர வாய்ப்பு இருக்குன்னு”ன்னு நாமதான் முன்னரே சொல்லி இருந்தோமே.. அதே மாதிரி அமித்ஷா வர்றாரு…

நயினார் பிரசாரத்தை மதுரையில தொடங்கும் போது எல்லா கூட்டணி கட்சி தலைவர்களும் வந்தாங்க.. அதிமுகவுல இருந்து செல்லூர் ராஜூ, உதயகுமார் எல்லாம் போனாங்க.. ஆனா நாளைக்கு அமித்ஷா கூட்டத்துக்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பே இல்லையாம்.. லோக்கல்ல அதிமுக விஜயபாஸ்கர்தான் ‘கூட்டத்துக்கும் செலவுக்கும்’ பொறுப்பெடுத்துகிட்டு பம்பரமா சுத்துறாருய்யா.

ஓஹோ.. சிபிஆர் சென்னை விசிட்டுல ஏதோ பரபரப்பாமே..

அதை பரபரப்புன்னு சொல்ல கூடாதுய்யா.. ஏர்போர்ட்டுல சிபிஆர், காரில ஏறி உட்கார்ந்தாரு.. பழக்க தோஷத்துல நயினாரு அந்த காரில ஏறிட்டாரு.. ஆனா துணை ஜனாதிபதி காரில ஆளுநர்தான் போக முடியுங்கிறது புரோட்டாகால்.. அதனால நயினாரை இறக்கிவிட்டு ஆளுநர் ரவி காரில் ஏறிகிட்டாரு.. நயினாரு கொஞ்ச நேரம் பரிதவிச்சுட்டாருய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share