கோவையில் உள்ள கொங்கு நாடு கல்லூரியில் நடைபெறும் சிந்து சரஸ்வதி நாகரிகம் கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் அரசு உதவி பெறும் கல்லூரியில் இன்று (டிசம்பர் 19) சிந்து சரஸ்வதி நாகரிகம் எனும் வரலாற்று கருத்தரங்கு நிகழ்ச்சி இன்றும், நாளையும் தென்னிந்திய ஆய்வு மையத்தால் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கோவை பவர் ஹவுஸ் பகுதியில் , தந்தை பெரியார் திராவிடர் கழகம், உட்பட முற்போக்கு இயக்கத்தினர் அந்த கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரலாற்றில் சரஸ்வதி நாகரிகம் என்ற ஒன்றே இல்லை. சிந்து சமவெளி நாகரிகம் தான் முதன்மையானதாக உள்ளது.
இந்த உண்மையை மறைக்கும் நோக்கில் அந்த கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கோவையில் நடைபெறும் சிந்து சரஸ்வதி கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
இந்த கருத்தரங்கில் திராவிட நாகரிகத்தை மறுத்து,வேத நாகரிகத்தை புகுத்த முயல்கின்றனர். இதன் மூலம் வரலாற்றை திருத்தி மாணவர்களுக்கு சொல்ல முயல்வதோடு, இந்த கல்லூரியில் கல்வியை காவி மயமாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட அனைத்து முற்போக்கு இயக்கத்தினரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
