நாடாளுமன்ற மாநிலங்களவையில் Operation Sindoor ராணுவ நடவடிக்கை குறித்து ஜூலை 29-ந் தேதி விவாதம் நடைபெறக் கூடும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளும் முடங்கி இருக்கின்றன.
இந்த நிலையில் ஜூலை 29-ந் தேதி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் Operation Sindoor ராணுவ நடவடிக்கை குறித்து விவாதம் நடைபெறக் கூடும் என்றும் மொத்தம் 16 மணிநேரம் இந்த விவாதத்துக்காக ஒதுக்கப்பட இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, Operation Sindoor ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று மத்திய அரசு சொல்கிறது; ஆனால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், Operation Sindoor ராணுவ நடவடிக்கையை தாமே நிறுத்தியதாக 25 முறை சொல்லிவிட்டார். எந்த ஒரு நாடும் நமது வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கவில்லை. Operation Sindoor விவகாரத்தில் ஏதோ ஒன்று மறைந்துள்ளது என சந்தேகம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.