ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமித்ஷா இன்று (ஜூலை 29) பதிலளித்து உரையாற்றினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கியது. அப்போது முதல் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் அலுவல்கள் முடங்கின.
இந்தநிலையில் நேற்று (ஜூலை 29) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே காரசார விவாதங்கள் நடந்தன. நள்ளிரவு 12 மணி வரை அவை நடைபெற்றது.
இன்று காலை (ஜூலை 29) அவை தொடங்கி நடைபெற்ற நிலையில் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பேசினார்.
“பஹல்காம் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன மதம் என்று கேட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்றிலிருந்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இதுதொடர்பாக விவாதித்து வருகின்றனர். சிஆர்பிஎப் வீரர்கள், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் ராணுவம் இணைந்து நடத்திய ஆப்ரேஷன் மகாதேவில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சுலேமான் என்ற பைசல், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்ரேஷன் மஹாதேவ் மே 22அன்று தொடங்கப்பட்டது.
பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் பஹல்காம் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதே துப்பாக்கிகள்தான் என்பதை பாலிஸ்டிக் மற்றும் தடயவியல் பகுப்பாய்வும் காட்டுகின்றன” என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நாளில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பினர்.
இதையடுத்து எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசத் தொடங்கிய அமித்ஷா, பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட செய்தியை கேட்டு, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மகிழ்ச்சியடைவார்கள் என்று நினைத்தேன். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு மகிழ்ச்சி இல்லை. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இது என்ன மாதிரியான அரசியல்? ” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனால் அமித்ஷால் ஒரு சில நிமிடங்கள் தனது உரையை நிறுத்தினார்.
இந்தநிலையில் எம்.பி.அகிலேஷ் யாதவ் அமித்ஷாவை பார்த்து கை நீட்டி பேசிய போது, “சகோதரரே, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மதத்தை பார்த்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமித்ஷா, “பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 1055க்கும் மேற்பட்ட சாட்சிகளை என்.ஐ.ஏ விசாரித்தது. பிரதமர் மோடி பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார்” என்று புகழ்ந்து பேசினார்.
இந்தநிலையில் பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, “எங்களிடம் பயங்கரவாதிகளுடைய பாகிஸ்தான் வாக்காளர் அடையாள அட்டை, துப்பாக்கி உரிமங்கள் மற்றும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் உள்ளன.
பஹல்காம் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும், துப்பாக்கிகளும் எஃப் எஸ் எல் அறிக்கையுடன் ஒத்துப்போகின்றன. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும். ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு நற்சான்று கொடுப்பது ஏன்? ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தானை நாங்கள் ஏன் தாக்க வேண்டும்? இந்தியாவின் 130 கோடி மக்களும் உங்களை மன்னிக்கமாட்டார்கள்” என்று காட்டமாக பதிலளித்தார்.
தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உரையாற்றிய அமித்ஷா யுபிஏ ஆட்சியில் எத்தனை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது… அதற்கு எப்படி பதிலடி கொடுப்பட்டது என்பது குறித்தும் பேசி காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.
“2004-2014 க்கு இடையில், 7200 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. 714 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 1068 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்” என்று குறிப்பிட்ட அமித்ஷா இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார்
அதேபோல், 2015-2025 க்கு இடையில், 1525 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. 324 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 542 பாதுகாப்புப் படையினர் மரணமடைந்தனர். இந்த காலக்கட்டத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 162% அதிகரித்துள்ளது. 370வது பிரிவை ரத்து செய்ததால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டது. என்.டி.ஏ ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதாக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்கிறார்கள். வித்யாசம் என்னவென்றால் பயங்கரவாதிகள் யாரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஜம்மு காஷ்மீரில் எந்த பயங்கரவாதிகளும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் கோஷம், அமளிக்கிடையே அமித்ஷா இந்த உரையை ஆற்றினார். இறுதியாக ராணுவ வீரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நன்றி தெரிவித்து உரையை முடித்தார்.