2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு ஆதரவாக கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதே வேளையில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணம் பல்வேறு பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.

கோவில் பணத்தில் கல்லூரியா?
கடந்த மாதம் கோவை வடவெள்ளி பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, ”அறநிலையத்துறை கோவிலில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து தமிழக அரசு கல்லூரி கட்ட போகிறது. கோவிலை அபிவிருத்தி பண்ணுவதற்காக உள்ள அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன் அரசாங்கத்தில் இருந்து கல்லூரி கட்டினால் வேண்டாமா? அறநிலையத்துறையில் இருக்கும் நிதியை எடுத்து இதற்கு செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம்?” என பேசியிருந்தார்.
எடப்பாடியின் இந்த பேச்சுக்கு கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கோவில் புனரமைப்பு, குடமுழுக்கு என அறநிலையத்துறை செயல்கள் ஆதீனங்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது.
இந்த சூழலில், தமிழ்நாட்டில் அறநிலையத்துறையே கலைக்க வேண்டும் என்று கூறி வரும் பாஜகவை வழிமொழியும் வகையில் எடப்பாடி பேச்சு அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் பாஜவுடன் கூட்டணி வைத்த பிறகு அக்கட்சியின் தேசிய தலைமையை மகிழ்விக்கும் வகையில் எடப்பாடி இதுபோனறு பேசி வருவதாக விமர்சித்தனர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பழனியில் இந்து சமய அறநிலையத் துறை நிதியில் இருந்து கட்டப்பட்ட பழனியாண்டவர் தொழிநுட்பக் கல்லூரி நிர்வாக கட்டிடத்தை திறந்து வைத்ததற்கான கல்வெட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அதனை சுட்டிக்காட்டி,‘‘பழநி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி எல்லாம் கட்டியது யார்? கோயில் பணமா? இல்லை அரசுப் பணமா? தாங்கள் ஆட்சியில் இருந்த போது நீங்களும், உங்களது தலைவர்களும் கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டிடங்கள் கட்டியது சரியா?’’ என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் கண்டனம்!
வேலூரில் எடப்பாடி நேற்று (ஆகஸ்ட் 18) பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஆனால் ஆம்புலன்ஸில் ஆள் இல்லாததால், அது அதிமுக கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த எடப்பாடி, ”அடுத்த தடவை ஆம்புலன்ஸ் வந்தால் பேஷண்ட் ஏத்திட்டு போக வேண்டியிருக்கும்” என ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களின் போது ஆம்புலன்ஸ் வந்தால் தொண்டர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுவார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக ஆம்புலன்ஸ் டிரைவருக்கே மிரட்டல் விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் பிவின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நேற்று இரவு அணைக்கட்டு மருத்துவமனையில் நோயாளியை அழைக்க சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து, அவமதித்து அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
நேரம் காலம் பார்க்காமல், மருத்துவ அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பதுதான் எங்களின் பணி. அந்தப் பணியை மதித்து பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை ஏற்க முடியாது. உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பழனிசாமி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவருக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

திடீரென சரிந்த வரவேற்பு கட் அவுட்!
இதுமட்டுமின்றி இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அருகே எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு வரவேற்பு கட் அவுட் திடீரென சாய்ந்தது. இதில் நல்வாய்ப்பாக எடப்பாடி சென்ற வாகனம் விபத்தில் தப்பித்த நிலையில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமைந்தது.
இதுதொடர்பாக கிராம உதவியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த விழா ஏற்பாடு செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிக்கலில் எடப்பாடி வாகனம்!
அதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரிஸ்டாட்டில் என்பவர் மோட்டார் வாகன சட்ட விதிமீறல் பிரிவின் கீழ் வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையில் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்துள்ளார்.
பொதுவாக ஒரு வாகனம் இப்படி தான் இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. தங்களது இஷ்டத்திற்கு அதை மாற்றக்கூடாது. ஆனால் எடப்பாடி பயணித்து வரும் வாகனம் போக்குவரத்து விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக கூறி அவர் புகார் அளித்துள்ளார்.
மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி!
அதே மாவட்டத்தில் கடலாடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக அக்கட்சி சார்பில் இரும்பு கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது.
இடையூறாக வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை அகற்ற கங்காதரன் என்பவர் முயன்ற நிலையில், மேலே சென்றுக் கொண்டிருந்த மின்சாரம், கொடிக்கம்பம் வழியாக பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உயிரிழந்த கங்காதரனின் உடலை வாங்க மறுத்து 36 மணி நேரம் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கடலாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவை தொடர் தோல்வியில் இருந்து மீட்க எடப்பாடி பழனிசாமி கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதே வேளையில், தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.