தஞ்சாவூர் அருகே ரயில்வே கேட்டில் நிகழ்ந்த பாசப் போராட்டம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பின்னவாசல்- சித்தாதிக்காடு இடையே ரயில்வே கேட் உள்ளது. ஜனவரி 3-ந் தேதி இரவு ராமேஸ்வரம்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் செல்வதற்காக இந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
பின்னவாசலைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்துவரப்பட்டார். அப்போது, ‘ரயில்வே கேட்டை திறங்க.. உயிருக்கு ஆபத்து.. உயிரை காப்பாற்றுங்க’ என கேட் கீப்பர் அருள்ஞானடெல்பினிடம் அப்பெண்ணின் உறவினர்கள் மன்றாடினர்.
கேட் கீப்பரோ, “ரயில் கிராஸ் செய்ய போகுது.. கேட்டை திறக்க முடியாதே..” என பதற்றத்துடன் கூறினார்.
ஆனாலும், அந்த பெண்ணின் உறவினர்கள், “ஒரு உயிரை காப்பாத்துங்கம்மா..” என கண்ணீரும் கம்பலையுமாக கதற..
”அய்யோ.. நான் கேட்டை திறக்கவே முடியாது.. என்னை நம்பி பல உயிர்கள் வந்துகிட்டு இருக்கே” என கேட் கீப்பர் அருள்ஞானடெல்பின் பதற்றத்துடன் சொல்ல அந்த இடமே ‘பாசப் போராட்ட’ களமாக மாறியது.
அந்நிலையில், “அவங்களை கேட்டுக்கு கீழே குனிஞ்சு இந்த பக்கமா கூப்பிட்டு வாங்க.. என்னோட வண்டியை எடுத்துகிட்டு ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போங்களேன்..” என கேட் கீப்பர் கதறலுடன் சொன்னார்.
இதனை ஏற்றுக் கொண்ட உறவினர்கள், கேட்டை கடந்து வந்து அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. குக்கிராமத்தின் ரயில்வே கேட்டில் இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த உணர்வுப்பூர்வமான போராட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
