சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகள் மற்றும் விமானங்களில் பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் 16-ல் கிருஷ்ண ஜெயந்தியும் ஆகஸ்ட் 17 வார விடுமுறை என மொத்தமாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதே சமயம் ஆடி மாத திருவிழாக்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இதனால் தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் வழக்கம் போல் இம்முறையும் ரயில்கள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளுக்கான டிக்கெட் விற்பனை முடிந்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நோக்கி செல்லும் சூழலில் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.
சாதாரணமாகவே வார விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. இந்த சூழலில் தொடர் விடுமுறை காரணமாக தற்போது சென்னையிலிருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 2000க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு சுமார் ரூ.4000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சி தரும் விமான கட்டணம்
இதேபோல விமானங்களுக்கான கட்டணமும் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,827ஆக இருந்த விமான கட்டணம் ரூ.14,518 ஆகவும், கோவைக்கு ரூ.3,818ல் இருந்து ரூ.15,546 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை செல்லும் விமான கட்டணம் ரூ.4,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது.
தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் இதுபோன்ற கட்டண உயர்வு தொடர் கதையாக உள்ளது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.