பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. எனினும் இத்திட்டம் கொண்டு வரப்படாததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசின் பென்ஷன் கமிட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் என்று அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது..
இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 2021 தேர்தலின் போது திமுகவின் முக்கிய கோரிக்கையாக புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஒன்பது மாதத்தில் அரசுக்கு பரிந்துரை வழங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இக்குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தமிழக நிதி அமைச்சகத்தின் பென்ஷன் கமிட்டி கடந்த 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் பழைய ஓய்வூதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு அரசு ஊழியர்களை சந்தித்து ஓய்வூதியம் குறித்த ஆலோசனைகளை பெற உள்ளது.
இதற்காக வரும் 18 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளிலும் , செப்டம்பர் 1 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளிலும் அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் இந்த குழு ஆலோசனை நடத்த உள்ளது.
தலைமைச் செயலகத்தில் பத்தாவது மாடியில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு வந்து அரசு ஊழியர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் சங்கம், தமிழ்நாடு வணிகவரித்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசுத் துறை ஓட்டுநர்கள் சங்கம், பணி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் சங்கம், அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அமைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த குழு இப்பொழுது விழித்துக் கொண்டு பணி செய்ய தொடங்கவிருப்பது மன நிறைவை அளிக்கிறது.
கருத்துக்கேட்பு கூட்டங்கள் அடுத்த மாதம் 9ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசு தரப்பில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு பணிகளையும் முடித்து செப்டம்பர் மத்திக்குள் இக்குழு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.