பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வரிடம் இன்று (டிசம்பர் 30) சமர்ப்பித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதியை அளித்திருந்தது.
எனினும் இன்னும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இன்னும் 4 மாதங்களில் தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது.
இதற்கிடையே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அரசு ஊழியர்களின் சங்கங்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை கேட்டு அறிக்கை தயாரித்தது. அதன்படி, இடைக்கால அறிக்கையை கடந்த அக்டோபர் மாதம் முதல்வரிடம் சமர்ப்பித்த ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ், இன்று (டிசம்பர் 30) இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இறுதி அறிக்கை விரிவான தரவுகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனவே ஜனவரி 6ஆம் தேதிக்குள் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு அளித்த அறிக்கை தொடர்பாக ஆலோசனை செய்து இதுதொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
