அமைச்சர் எ.வ. வேலு காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (மார்ச் 22) சோதனை செய்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த காலகட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி எடுத்துச் செல்ல வேண்டுமானால் அதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
தேர்தலின் போது பரிசுப்பொருட்கள், பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை அருகே பூந்தமல்லியில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரூ.1 கோடி இருந்தது தெரியவந்தது. நகைக் கடை மற்றும் துணிக்கடைகளில் விற்பனையான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக எடுத்துச் செல்கிறோம் என்று அந்த வாகனத்தில் வந்தவர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் துணை தாசில்தார் விஜய் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வரும் நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு காரிலும் இன்று சோதனை நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாம்பூண்டி கிராமத்தில் இன்று போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அமைச்சர் வேலுவின் கார் வந்தது. அமைச்சரின் காரை நிறுத்திய அதிகாரிகள் பின்பக்க கதவு உள்ளிட்டவற்றை திறந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் எதுவும் சிக்காததையடுத்து அமைச்சரின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
அமைச்சரின் காரில் சோதனை நடந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Gopura Vasalile: கார்த்திக் – பானுப்ரியாவின் ‘கல்ட் கிளாசிக்’ திரைப்படம்!